இந்தியா

ஐபோன் தொழிற்சாலை தாக்கப்பட்டதால் ரூ.437 கோடி அல்ல, ரூ.52 கோடி மட்டுமே சேதம்

செய்திப்பிரிவு

பெங்களூருவை அடுத்துள்ள நரசாப்புராவில் தைவான் நாட்டை சேர்ந்த விஸ்ட்ரான் ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டதாகக் கூறி ஊழியர்கள் கடந்த சனிக்கிழமை தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், 150-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலால் ரூ.437 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளதாக தொழிற்சாலை தரப்பில் கூறப்பட்டது.

கர்நாடக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஷிவராம் ஹெப்பார் தொழிற்சாலையை நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, ''ஐபோன் தொழிற்சாலை தாக்கப்பட்டதில் சேத மதிப்பு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதாவது சேத மதிப்பு ரூ.437 கோடி அல்ல. ரூ.26 கோடி முதல் ரூ.52 கோடி வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு தொழிலாளர் துறை மூலம் சேத மதிப்பை கணக்கிடும் பணியை மேற்கொண்டு வருகிறது. சேத மதிப்பு குறைவாக இருந்தாலும் பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது'' என்றார்.

          
SCROLL FOR NEXT