பாகிஸ்தானில் பெண் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர் கல்வியாளர் ருக்கையா பரூக்கி. இந்தியாவில் பிறந்த இவர், பாகிஸ்தான் மருமகளாகி விட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மாநாட்டுக்கு வந்திருந்தார். ‘தி இந்து‘வுக்காக அவரிடம் பேசினோம்.
பாகிஸ்தானில் பெண் கல்வி எப்படி உள்ளது?
நகரங்களில் இருபாலர்களும் இணைந்து கல்வி பயில்கிறார்கள். ஆனால், கிராம பெண்களால் இன்னும் கல்வியில் முன்னேற்றம் பெற முடியவில்லை. அங்கு நிலச் சுவான்தார் மற்றும் ஜமீன்தார் களின் ஆளுமை அதிகம். பழமை வாதிகளான இவர்கள் பெண் களுக்கு கல்வி அளிக்க விரும்பு வதில்லை. பாகிஸ்தான் அரசும் பெண் கல்வியில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. பல தன்னார்வ நிறுவனங்கள் பெண் கல்விக்காக பாடுபடுகின்றன. தனியார் பள்ளி களுடன் இணைந்து கிராமப்புறப் பெண்களுக்கு தனியாக கல்விப் பிரிவை தொடங்கியுள்ளனர். அதற்கு பலன் கிடைத்து வருகிறது.
மலாலா தாக்கப்பட்ட சம்பவத்தால், பாகிஸ்தானில் பெண் கல்வியில் ஏற்பட்ட மாற்றம் என்ன?
மலாலா சம்பவத்தை நீங்கள் பாகிஸ்தான் முழுமைக்குமாக பொருத்திப் பார்க்கக் கூடாது. ஏனெனில், அங்குள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பிரச்சினைகள் மாறுபடுகின்றன. உதாரணமாக, மலாலா இருந்த ஸ்வாட் பள்ளத் தாக்கு பகுதியில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. இது போன்ற பகுதிகளில்தான் மோச மான சூழலே தவிர மற்ற பகுதிகளில் அப்படி இல்லை. மலாலா சம்ப வத்தை வைத்து பாகிஸ்தான் மீது ஊடகங்கள் உருவாக்கிய பிம்பம் உண்மையில் அங்கு கிடையாது.
நகர்ப்புறங்களில் பெண்களில் படித்தவர்கள் அதிகம். முற்போக்கு சிந்தனை கொண்ட அவர்களுக்கு ஆண்களுக்கு இணையான சுதந்திரம் கிடைக்கிறது. முஸ்லிம் பெண்கள் அணியும் உடைகளிலும் எந்தவித கட்டாயமும் கிடையாது.
பாகிஸ்தானில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கிறதா?
பெண்களுக்கு தனி இட ஒதுக் கீடு இல்லை. இதற்காக தன்னார்வ அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.
இந்தியப் பெண்களின் நிலை குறித்து பாகிஸ்தானியர்களின் கருத்து என்ன?
டெல்லியின் நிர்பயா சம்பவத் துக்குப் பின் எங்கள் கருத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக சுதந்திரம் பெற்ற பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய் விட்டதாகவே கருதுகிறோம்.
மணமாகி செல்லும் இந்திய பெண்களுக்கு எளிதில் பாகிஸ்தான் குடியுரிமை கிடைக்கிறதா?
இவ்விஷயத்தில் இந்தியாவைப் போல் அல்ல பாகிஸ்தானின் நிலை. நான் ஏழு வருடங்களுக்கு பின்பே பாகிஸ்தான் பிரஜையானேன். பாகிஸ்தானியப் பெண்கள் இரு நாடுகளும் நல்லுறவுடன் இருக்கவே விரும்புகிறார்கள்.
அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 1960-கள் வரை பாகிஸ்தான் மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். அந்தநிலை மீண்டும் வர வேண்டும். 68 ஆண்டு களுக்கு முந்தைய பாகிஸ்தானின் வரலாறு என்பது இந்திய வரலாறு தானே!