உத்தரப் பிரதேசத்தில் எரிவாயு டேங்கருடன் பஸ் மோதியதில் 8 பேர் பலியாகினர். 21 பேர் காயமடைந்தனர்.
உ.பி.யின் சம்பல் மாவட்டத்தில் தனரி காவல் நிலையப் பகுதியில் இந்தக் கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மொராதாபாத் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி) ரமித் சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''இன்று காலை ஆக்ரா-மொராதாபாத் சாலையில் உ.பி. ரோடுவேஸ் பேருந்தும் ஒரு எரிவாயு டேங்கரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 21 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இறந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
எரிவாயு டேங்கரில் இன்னும் கொஞ்சம் எரிவாயு இருப்பதால் இச்சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன''.
இவ்வாறு ரமித் சர்மா தெரிவித்தார்.
முதல்வர் இரங்கல்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்குப் போதிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.