மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் பல்வேறு எல்லைகளில் அமர்ந்து போராடி வரும் விவசாயிகளை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மத்திய அரசு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
அதுமட்டுமல்லாமல், வேளாண் சட்டங்களால் உண்டாகும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் பொருட்டு, நாடு முழுவதும் விவசாயிகளின் பிரதிநிதிகள், மத்திய அரசுப் பிரதிநிதிகள் கொண்ட குழுவை உருவாக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ரிஷாப் சர்மா, வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் பாரிகர் மூலம் தாக்கல் செய்த மனுவில், ''வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல், போக்குவரத்து முடக்கம் ஏற்படக் கூடாது என்பதற்காக புராரியில் உள்ள நிராங்கரி மைதானத்தில் போராட்டம் நடத்த போலீஸார் கடந்த மாதம் 27-ம் தேதி ஒதுக்கினர்.
ஆனால், தற்போது விவசாயிகள் டெல்லி சாலைகளில் நடத்திவரும் போராட்டத்தால் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து முடங்கி, கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஷாகின்பாக் பகுதியில் நடத்தும் போராட்டம் குறித்த வழக்கில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ''பொது இடங்களைக் காலவரையின்றி ஆக்கிரமித்துப் போராட்டம் நடத்தக் கூடாது. கரோனா வைரஸ் சமூகப் பரவல் ஏற்படாமல் தடுக்கவும், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும், மருத்துவ உதவிகள், அவசரகால உதவிகள் தடையின்றிக் கிடைக்கவும் உடனடியாகப் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்துவது அவசியம்'' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏஎஸ் போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வில் இன்று காணொலி மூலம் இந்த மனு விசாரிக்கப்பட்டது. மத்திய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
அப்போது தலைமை நீதிபதி பாப்டே, “விவசாயிகளுடன், விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தை இதுவரை பயலனளிக்கவில்லைதானே” என்று கேட்டார்.
அதற்கு துஷார் மேத்தா, “ஆம், ஆனால் விவசாயிகள் நலனுக்கு விரோதமாக மத்திய அரசு ஏதும் செய்ய முடியாது” என்றார்.
இதையடுத்து, ''வேளாண் சட்டங்களால் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க நாடு முழுவதும் விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், அரசு சார்பில் பிரதிநிதிகள் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்துப் பேசலாம். இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம். நாளை இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.