தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் பேட்டி அளித்த காட்சி: படம் |ஏஎன்ஐ. 
இந்தியா

குஜராத் மாதிரியை டெல்லியிலும் மோடி செயல்படுத்துகிறார்: குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்துக்கு தேசியவாத காங்கிரஸ் கண்டனம்

ஏஎன்ஐ

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரை ரத்து செய்துள்ள மத்திய அரசை தேசியவாத காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது. மேலும், குஜராத் மாதிரியை டெல்லியிலும் பிரதமர் மோடி செயல்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020-ம் ஆண்டில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடத்தப்படாது. 2021-ம் ஆண்டு ஜனவரியில் பட்ஜெட் கூட்டத் தொடரோடு இணைந்து நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தனித்தனியே கடிதம் எழுதி, குளிர்காலக் கூட்டத்தொடர் நடத்தமுடியாத சூழலுக்கு வருத்தம் தெரிவித்து, கரோனா சூழலை விளக்கியுள்ளார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையைத் தேசியவாத காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது. அந்தக் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் மும்பையில் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

“ நாட்டில் கரோனா வைரஸ் பரவல் சூழல், விவசாயிகள் போராட்டம் ஆகியவற்றைக் குறித்து விவாதங்கள் நடத்துவதைத் தவிர்க்கும் வகையில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்தாமல் நேரடியாக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு மத்திய அரசு சென்றுவிட்டது.

மத்திய அரசின் இந்த முடிவு என்பது, குஜராத் மாதிரியை டெல்லியிலும் பிரதமர் மோடி செயல்படுத்துகிறார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

ஏனென்றால், குஜராத்தில் முதல்வராக மோடி இருந்த நேரத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்படுவதைத் தவிர்த்து வந்தார். அதேபோன்ற செயல்பாட்டைத் தற்போது டெல்லியிலும் மோடி செயல்படுத்துகிறார்”.

இவ்வாறு நவாப் மாலிக் குற்றம் சாட்டினார்.

ஏற்பாடுகள் இல்லை

வழக்கமாக நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 2-வது வாரத்தில் தொடங்கி டிசம்பர் 2-வது வாரம் வரை நடைபெறும். ஆனால், இதுவரை நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடத்துவதற்கான எந்த ஏற்பாடுகளையும் மக்களவை, மாநிலங்களவைச் செயலாளர்கள் செய்யவில்லை. அதற்கான பணிகளிலும் ஈடுபடவில்லை.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடத்தப்படுவதென்றால், 15 நாட்களுக்கு முன்னதாகவே எம்.பி.க்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். கேள்வி நேரத்தில் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை அனுப்புமாறு கோர வேண்டும். ஆனால், இதுவரை எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை.

தெளிவான முடிவு

கரோனா தொற்றுக்கு மத்தியில் கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரை மத்திய அரசு நடத்தி எம்.பி.க்கள், நாடாளுமன்ற ஊழியர்கள், பாதுகாவலர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டனர். இதனால், முன்னதாகவே கூட்டத்தொடர் நிறைவடைந்தது.

அதேபோன்ற சூழல் இந்த முறையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், கூட்டத்தொடர் நடத்துவது குறித்து மத்திய அரசு மிகவும் கவனத்துடன் ஆலோசித்து வந்தது.

டெல்லியில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை தீவிரமாகப் பரவி மீண்டும் மக்கள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தச் சூழலில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடத்துவது எம்.பி.க்கள், ஊழியர்கள் பாதுகாப்புக்கு பெரும் கேள்விக்குறியாக இருந்த நிலையில், அரசு தெளிவாக முடிவு எடுத்துள்ளது.

SCROLL FOR NEXT