உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால் பாதிக்கப்பட்ட ஹரியாணா மாநிலம் சன்பெட் கிராமத்தைச் சேர்ந்த தலித் குடும்பத்தின் உறவினர்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார்.
நடந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்தில் தலித் வீட்டுக்கு உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி புறநகர் பகுதியில் சன்பெட் கிராமத்தில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு இச்சம்பம் நடந்தது. ஜிதேந்தர் (31), அவரது மனைவி ரேகா (28), அவர்களின் இரண்டரை வயது குழந்தை வைபவ், 11 மாத குழந்தை திவ்யா ஆகியோர் தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, ராஜ்புத் இனத்தைச் சேர்ந்த சிலர் ஜிதேந்தரின் வீட்டுக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதில், இரு குழந்தைகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த னர். ரேகா படுகாயமடைந்தார். ஜிதேந்தருக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஜிதேந்தர் கூறும்போது, "நாங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றியுள்ள னர். வாசனை வந்து மற்றவர்களை எழுப்பி தப்ப வைப்பதற்குள் தீ பரவிவிட்டது. கதவை வெளிப்பக்க மாக பூட்டி விட்டனர். என் குழந்தை கள் என் கண்முன்னே துடிதுடித்து இறந்தனர். இக்கிராமத்துக்கு மீண்டும் வந்தால் என் குடும்பத் தையே அழித்து விடுவதாக அக் கும்பல் மிரட்டியது. நான் வரமாட்டேன்; தயவு செய்து என் குழந்தைகளைத் திருப்பிக் கொடுங்கள்" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
முன்விரோதம் காரணமாக இச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படு கிறது. ஒரு கொலை தொடர்பாக ராஜ்புத் இனத்தைச் சேர்ந்த அக் கும்பல் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டதைத் தொடர்ந்து இம்முன் விரோதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஃபரிதாபாத் காவல் ஆணையர் சுபாஷ் யாதவ் கூறும்போது, "சன்பெட் கிராமத்தைச் சேர்ந்த பல்வந்த் அவரது மகன் தரம் சிங் உட்பட 11 பேர் மீது கொலை உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜ்நாத் சிங் வருத்தம்
இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அனைத்துத் தரப்பினருக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி கோரிய ராஜ்நாத் சிங், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்துவிடாமல் தடுக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு மாநில அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.