வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளைக் குழப்பமடையச் செய்து, அவர்களைத் தவறாக வழிநடத்துவது எதிர்க் கட்சிகளுடைய சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.
குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதிக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்ட, வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். உலகிலேயே மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டம், குடிநீர் சுத்திகரிப்புத் திட்டம், பால் பதப்படுத்தும் திட்டம் ஆகியவற்றுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அதன்பின் உள்ளூர் விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அதன்பின் நடந்த நிகிழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
''புதிய வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகளின் தவறான தகவலால் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். விவசாயிகள் அமைப்பும், எதிர்க்கட்சிகள் கூட இதுநாள்வரை என்ன கோரிக்கை விடுத்து வந்தார்களோ அதுதான் புதிய வேளாண் சட்டங்களில் இடம் பெற்றுள்ளன. மத்திய அரசு எப்போதும் விவசாயிகள் நலனில் அக்கறை வைத்திருக்கிறது. விவசாயிகளின் குறைகள் தீர்க்கப்படும் என உறுதியளிக்கிறோம்.
எதிர்க் கட்சிகளில் அமர்ந்திருப்போர் விவசாயிகளைத் தவறாக வழிநடத்துகிறார்கள். அவர்கள் ஆட்சியில் இந்தச் சட்டங்கள் முன்மொழியப்பட்டாலும் அவர்களால் முடிவு எடுக்க முடியவில்லை. ஆனால், இன்று தேசம் வரலாற்றுச் சிறப்புமிக்க அடியை எடுத்துள்ள நிலையில், விவசாயிகளைத் தவறாக வழிநடத்துகிறார்கள்.
விவசாயிகளைக் குழப்பமடையச் செய்து, தவறாக வழிநடத்துவது என்பது எதிர்க் கட்சிகளின் சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். புதிய வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், விவசாயிகளின் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படும், பறிக்கப்படும் என விவசாயிகளிடம் தவறான தகவல் சொல்லப்பட்டுள்ளது.
நான் உங்களிடம் கேட்கிறேன். பால் பண்ணை உரிமையாளிடம் நீங்கள் பால் விற்றால் உங்களின் கறவை மாட்டை அவர்கள் எடுத்துக் கொள்வார்களா? விளைபொருட்களை விற்பனையாளரிடம் விற்றால், உங்கள் நிலத்தை அவர்கள் எவ்வாறு பறிக்க முடியும்?
எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது இந்தச் சட்டங்களுக்கு ஆதரவாக, சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக இருந்தன. ஆனால், எந்த முடிவும் அவர்களால் எடுக்க முடியவில்லை. வேளாண் சட்டங்கள் தொடர்பான அனைத்துச் சந்தேகங்களையும் தெளிவுபடுத்த எனது அரசாங்கம் தயாராக இருக்கிறது''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.