கோப்புப்படம் 
இந்தியா

காப்பகக் குழந்தையின் கல்விக்காக மாதம் ரூ.2 ஆயிரமும், ஆன்லைன் கல்விக்காக புத்தகங்களும் வழங்கிட வேண்டும்: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

பிடிஐ

நாடு முழுவதும் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் கல்விக்காக மாதம் ரூ.2 ஆயிரமும், ஆன்லைன் கல்விக்குத் தேவையான பாடப் புத்தகங்களையும், எழுதுபொருட்கள், கட்டமைப்பு வசதிகளையும் வழங்கிட வேண்டும் என மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் அல்லது காப்பாளருடன் இருந்தாலும், இந்த உதவிகளை அடுத்த 30 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் நிலை குறித்து அறிந்த உச்ச நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது.

இதில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில், காப்பகத்தில் உள்ள குழந்தைகள் அனைவரும் கரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் இருக்க, அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் கொண்ட அமர்வு காணொலி மூலம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு உத்தரவுகளை இன்று பிறப்பித்தது.

இதில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து நீதிமன்றத்துக்கு உதவ வழக்கறிஞர் கவுரவ் அகர்வால் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருந்தார். தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

''கரோனா வைரஸ் பரவல் தொடங்கிய நேரத்தில் குழந்தைகள் காப்பகங்களில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 518 குழந்தைகள் இருந்தனர். அதன்பின் அதில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 788 குழந்தைகள் பெற்றோர் மற்றும் காப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.

குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் அவர்களி்ன் கல்விக்காக மாநில அரசுகள் ரூ.2 ஆயிரம் வழங்கிட வேண்டும். இந்த உதவியை மாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், அந்தக் குழந்தையின் குடும்பத்தாரின் நிதிச் சூழலை மனதில் கொண்டு வழங்கிட வேண்டும்.

குழந்தைகள் தங்கள் பெற்றோர் மற்றும் காப்பாளருடன் சேர்ந்தபின் அவர்களுக்குக் கல்வி மிகவும் அத்தியாவசியமானது என்பதன் முக்கியத்துவத்தை உணருங்கள். இதற்கு மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஒருங்கிணைப்பு செய்து குழந்தைக்குக் கல்வி சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்குத் தேவையான கல்வி தொடர்பான வசதிகள் மாநில அரசு சார்பில் முறையாக வழங்கப்படுகிறாதா என்பதை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு மையம் அடிக்கடி ஆய்வு செய்து, அதை மாவட்ட சட்டச் சேவை ஆணையத்திடம் அறிவிக்க வேண்டும்.

குழந்தைகள் ஆன்லைன் கல்விக்குத் தேவையான புத்தகங்கள், எழுதுபொருட்கள், அடிப்படைக் கட்டமைப்புகளை மாநில அரசுகள் அடுத்த 30 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும்.

குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுக்கப் போதுமான ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பதை உறுதிசெய்ய வேண்டும். ஏனென்றால், கடந்த மார்ச் மாதத்திலிருந்து குழந்தைகள் வகுப்புகளில் சென்று பாடம் படிக்க முடியாத சூழலில் இருப்பதால், அவர்களுக்கு நேரடியாக ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்க அனுமதிக்க வேண்டும்''.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT