சுயசார்பு பொருளாதாரமாக வளர சீனப் பொருட்களுக்கு மாற்றான உள்நாட்டு தயாரிப்புகளை அடையாளம் காண வேண்டும் என்று மத்திய சிறு, குறு தொழில் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
தொழில் துறை கூட்டமைப்பு களில் ஒன்றான ஃபிக்கி-யின்93-வது ஆண்டு பொதுக் கூட்டம்,காணொலி மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் எம்எஸ்எம்இ துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘சுயசார்பு பொருளாதாரம் என்ற இலக்கை எட்ட இறக்குமதியை குறைக்க வேண்டி இருக்கிறது. குறிப்பாக சீன பொருட்களுக்கு மாற்றாக இந்திய தயாரிப்புகளை அடையாளம் காண வேண்டும்’’ என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:
இந்திய ஜிடிபி.யில் சிறு,குறு தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 30 சதவீதமாகவும், ஏற்றுமதியில் 48 சதவீதமாகவும் இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் 11 கோடி வேலைவாய்ப்புகள் எம்எஸ்எம்இ துறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை சுயசார்பு பொருளாதார நாடாக மாற்ற நம்முடைய உற்பத்தி துறையின் ஜிடிபி பங்களிப்பை தற்போது உள்ள 24 - 26 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்த வேண்டும். அதற்கு சீன இறக்குமதியைக் குறைக்க தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டி இருக்கிறது.
சீன பொருட்களுக்கு மாற்றாக உள்நாட்டுத் தயாரிப்புகளை கண்டடைய வேண்டும். தரம் மற்றும் உற்பத்தி விலை ஆகியவற்றில் எந்தவித சமரசமும் இல்லாமல் உள்நாட்டு தயாரிப்புகளை சர்வ தேச தரத்துக்கு உருவாக்க வேண்டும்.
மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க, கிராமப்புற மற்றும் சிறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது. கிராமப்புற தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
கிராமப்புற பொருளாதாரத்தை தற்போதுள்ள ரூபாய் 80,000 கோடி அளவில் இருந்து ரூபாய் 2 லட்சம் கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் பெரும்பாலான உதிரிபாகங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றுக்கு மாற்றான தயாரிப்புகளை இந்தியாவில் உருவாக்கும் வகையில் ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.