டிஆர்பி முறைகேடு செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக ரிபப்ளிக் டிவி தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) நேற்று மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரிபப்ளிக் டிவி, ஃபக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய சேனல்கள் டிஆர்பிமுறைகேட்டில் ஈடுபட்டதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.அதாவது பார்வையாளர்கள் குறித்து மதிப்பிடும் பேரோமீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ள வீடுகளில் குறிப்பிட்ட அளவு பணம் கொடுத்து தங்கள் சேனல்களை தொடர்ச்சியாக பார்க்குமாறு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் பார்வையாளர்களும் வருமானத்தையும் பெருக்கிக் கொள்ளும் நோக்கில் செயல்பட்டுள்ளனர். இந்த மோசடி பட்டியலில் நியூஸ் நேஷன், மகா மூவிஸ், வாவ் மியூசிக் ஆகிய சேனல்களும் இணைக்கப்பட்டன.
இந்நிலையில், ரிபப்ளிக் டிவி சிஇஓ விகாஷ் கான்சந்தனி நேற்று மும்பை குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்படும் 13-வது நபர் விகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் இதே வழக்கில் ரிபப்ளிக் டிவி அதிகாரி பிரியா முகர்ஜி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.