சவிதியில் வீட்டு உரிமையாளரால் தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணின் கை துண்டிக்கப்பட்ட விவகாரத்தில், அந்தப் பெண்ணுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த பெண்ணின் கை துண்டிக்கப்படவில்லை. அவர் வீட்டிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது கையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என சவுதி போலீஸார் தற்போது கூறியுள்ளனர்.
சவுதி போலீஸாரின் இந்த முற்றிலும் மாறுபட்ட தகவல் இந்திய தரப்பு வாதத்துக்கு எதிர்மறையாக செல்கிறது.
இது தொடர்பாக சவுதி போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஃபவாஸ் அல் மெய்மான் கூறும்போது, "கஸ்தூரி முனிரத்தினம் வீட்டு உரிமையாளாரால் துன்பப்படுத்தப்பட்டார் என்பது குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.
மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவர் தப்பிக்க முயற்சித்தபோதே கீழே விழுந்து அடிப்பட்டதாக கூறப்பட்டுள்ளது" என்றார்.
சவுதி போலீஸின் கருத்து, கஸ்தூரி முனிரத்தினம் தரப்பு வாதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் உள்ளது.
வெளியுறவுத் துறை மறுப்பு
சவுதி போலீஸார் தரப்பு தகவலை வெளியுறவுத் துறை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சவுதியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் அவர்களிடமிருந்து இறுதிகட்ட அறிக்கை வரும்வரை இது குறித்து முடிவுக்கு செல்ல முடியாது என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் தி இந்து-வுக்கு தெரிவித்தனர்.
சம்பவ பின்னணி:
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா, விண்ணம்பள்ளியை அடுத்த மூங்கிலேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி முனிரத்தினம் (56). இவர் கடந்த ஜூலை மாதம் வீட்டுவேலைக்காக சவுதி அரேபியாவுக்குச் சென்றார். அங்கு வீட்டின் உரிமையாளர் இவருக்கு உணவு வழங்காமலும், அதிக வேலை கொடுத்தும் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கஸ்தூரியின் வலது கையை வீட்டின் உரிமையாளர் வெட்டியதால் அவர் ரியாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஸ்தூரி மகன் மோகன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த கஸ்தூரியின் குடும்பத்தார், அவரை உடனடியாக சொந்த நாட்டுக்கு திரும்பி அழைத்துவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.
இதற்கிடையே, கஸ்தூரியை பத்திரமாக மீட்க வெளியுறவு அமைச்சகமும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.