இந்தியா

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: முன்னாள் செயலர் உட்பட 6 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு

பிடிஐ

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு தொடர்பாக நிலக்கரித் துறை முன்னாள் செயலர் எச்.சி.குப்தா உட்பட 6 பேர் மீது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்தது.

மத்திய பிரதேசம் மாநிலம் ருத்ரபுரியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தை, (கே.எஸ்.எஸ்.பி.எல்) கமால் ஸ்பான்ஞ் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்ததை அடுத்து, இக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராச்சர், 6 பேர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். நிலக்கரித் துறை முன்னாள் செயலர் எச்.சி.குப்தா, உட்பட 6 பே மீதும் இந்திய தண்டனைச் சட்டங்கள் கிரிமினல் சதி (120-பி); ஏமாற்று (சட்டப் பிரிவு 420), பொதுச் சேவையில் உள்ள ஒருவரால் மக்கள் நம்பிக்கை சிதைக்கப்பட்டது (சட்டப் பிரிவு 409) ஆகியனவற்றின் கீழும், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார்.

குப்தாவைத் தவிர (கே.எஸ்.எஸ்.பி.எல்) கமால் ஸ்பான்ஞ் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் குமார் அலுவாலியா, பட்டயக் கணக்கர் அமித் கோயர், அரசு அதிகாரிகள் கே.எஸ்.க்ரோபா, கே.சாம்ரியா ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT