மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, பஞ்சாப் மாநில சிறைத்துறை டிஐஜி இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியின் பல்வேறு எல்லைகளிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 18 நாட்களாகப் போாரட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநில விவசாயிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுடன் நடத்திய 5 சுற்றுப் பேச்சும் தோல்வி அடைந்துள்ளது. நாளை முதல் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப்போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் சிறைத்துறை டிஐஜியாக இருந்த லக்மிந்தர் சிங் ஜக்கர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தனது வேலையை நேற்று ராஜினாமா செய்தார். இதற்கான அதிகாரபூர்வமான கடிதத்தை இன்று தலைமைச் செயலாளருக்கு ஜக்கர் அனுப்பி வைத்துள்ளார். இதை பஞ்சாப் காவல்துறை உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து டிஐஜி லக்மிந்தர் சிங் ஜக்கர் கூறுகையில், “வேளாண் சட்டங்களை எதிர்த்து அமைதியாகப் போராடிவரும் எனது விவசாய சகோதரர்களுக்கு ஆதரவாக எனது வேலையை நான் ராஜினாமா செய்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி ஏற்கெனவே விளையாட்டு வீரர்கள் தங்கள் விருதுகளை மத்திய அரசிடம் ஒப்படைத்து வருகின்றனர். இதில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், தனது பத்ம விபூஷண் விருதை மத்திய அரசிடம் திருப்பி அளித்துவிட்டார்.
அகாலிதளம் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் சுக்தேவ் சிங் திண்ஸாவும், விவசாயிகளுக்கு ஆதரவாக தனது பத்ம பூஷண் விருதைத் திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் சிறந்த கவிஞராக கருதப்படும் சுர்திஜ் பத்தார் தனது பத்ம ஸ்ரீ விருதையும் அரசிடம் திருப்பி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
விவசாயிகளின் போராட்டத்துக்கு உலக நாடுகளில் இருந்தும் நாளுக்கு நாள் ஆதரவு வலுத்து வருகிறது.