ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சாதா. | படம்: ஏஎன்ஐ. 
இந்தியா

அமித் ஷா இல்லத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி: ராகவ் சாதா உள்ளிட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 3 பேர் கைது

ஏஎன்ஐ

மத்திய அமைச்சர் அமித் ஷா இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற ராகவ் சாதா உள்ளிட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மூவரை டெல்லி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டதற்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சரின் இல்லத்திற்கு வெளியே தர்ணா நடத்த அனுமதி கோரி ராகவ் சாதா சனிக்கிழமை டெல்லி துணை காவல் ஆணையருக்கு கடிதம் எழுதினார்.

இதற்குப் பதிலளித்த டெல்லி காவல்துறை, "கோவிட்-19 தொற்று நோய் பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும், அனைத்து சமூக / கல்வி / விளையாட்டு / பொழுதுபோக்கு / கலாச்சார / மத / அரசியல் செயல்பாடுகள் / பிற கூட்டங்கள் தேசிய தலைநகரம் டெல்லி முழுவதும் 31.12.2020 வரை தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும், மத்திய உள்துறை அமைச்சரின் இல்லத்திற்கு வெளியே எந்தவொரு கூட்டமும் அனுமதிக்கப்படுவதில்லை. உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. டெல்லி காவல்துறையினருடன் ஒத்துழைக்குமாறு நீங்கள் கோரப்படுகிறீர்கள்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற ராகவ் சாதா மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருடன் மற்ற இரு எம்.எல்.ஏக்கள் ரிதுராஜ் கோவிந்த், குல்தீப் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT