காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி : கோப்புப் படம். 
இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வில் கிடைத்த ரூ.3 லட்சம் கோடியை ஏன் மக்கள் நிவாரணத்துக்குப் பயன்படுத்தவில்லை? மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி

ஏஎன்ஐ

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதன் மூலம் 2020ஆம் ஆண்டில் கிடைத்த கூடுதல் வருவாயை மக்கள் நிவாரண உதவிக்கு ஏன் பயன்படுத்தவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம். அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தல், கரோனாவுக்கான மருந்து கண்டுபிடிப்பு உள்ளிட்ட காரணங்களாலும் விலை உயர்ந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் கிடைத்த வருவாயை மத்திய அரசு என்ன செய்கிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது:

''2020-ம் ஆண்டில் மத்திய அரசு உற்பத்தி வரியை உயர்த்தியதால், பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டுகிறது. 2020-ம் ஆண்டில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதன் மூலம் கூடுதலாக ரூ.3 லட்சம் கோடி கிடைத்துள்ளது. மக்கள் நிவாரணத்துக்கு இந்த ரூ.3 லட்சம் கோடியைச் செலவிடுவதற்குப் பதிலாக இந்தப் பணம் எங்கே செல்கிறது விளக்கம் கொடுங்கள்?

மத்திய அரசு, ரூ.20 ஆயிரம் கோடி நாடாளுமன்றம் கட்டுவதற்கும், ரூ.16 ஆயிரம் கோடி பிரதமர் மோடிக்குப் புதிய விமானம் வாங்கவும், ரூ.2 கோடி நாள்தோறும் விளம்பரச் செலவுக்கும் பயன்படுத்துகிறது''.

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT