பரிதாபாத்தில் 2 தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோஹன் பாகவத்தின் இட ஒதுக்கீட்டை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று கூறிய கருத்து ஆகியவற்றுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளது என்று பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தெரிவித்துள்ளார்.
பிஹார் தேர்தலில் மாஞ்சி தலைவராக இருக்கும் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி, தேசிய ஜனநாயக் கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் மாஞ்சி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவிக்கும் போது, “இந்த இரண்டு விவகாரங்களினால் எதிர்க்கட்சியினர் ஆவேசமடைந்துள்ளனர். இதனால் இந்த இரண்டு விவகாரங்கள் குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி விளக்கம் அளிக்க வேண்டிய அழுத்தத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் விளக்கம் கொடுப்பதும் சில வேளைகளில் கடினமான வேலையே.
வி.கே.சிங் கூறியதை நான் முழுதும் கண்டிக்கிறேன். ஆனால் அவர் தனது வருத்தங்களைத் தெரிவித்துக் கொண்டதையும் நான் அறிவேன். மத்திய அரசு அல்லது தாழ்த்தபப்ட்டோருக்கான ஆணையம் இந்த விவகாரத்தை கையிலெடுக்கலாம். இந்த தேர்தலில் இந்த இரு கூற்றுக்களும் அது சொல்லப்பட்ட சூழலிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு எதிர்க்கட்சியினரால் திரித்து எடுத்து வைக்கப்படுகிறது.
எதிர்க்கட்சியினரின் இத்தகைய ஆவேசத்தினால் விளக்கம் அளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் விளக்கம் அளிப்பதும் சில வேளைகளில் கடினம்தான். மக்கள் இதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சியினை உணர்ந்து கடந்து செல்வார்கள்.
அதே போல் இடஒதுக்கீடு பற்றிய மோஹன் பாகவத் கூற்றும், அதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதாக இல்லை. மாறாக நலிவடைந்த பிரிவினருக்கு அது இன்னும் கூடுதலாக சேவையாற்றும் விதமாக பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். யாருக்குத் தெரியும், இட ஒதுக்கீட்டு முறையில் இன்னும் கூட அதிக பயன்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைக்கக் கூடும்”
இவ்வாறு கூறினார் மாஞ்சி.