மேற்கு வங்கத்தில் விரைவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலாகும் என்று பாஜக தேசியப் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா நேற்று தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் 3-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி திட்டம் தீட்டி வருகிறது. மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. இதுதவிர இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகள் தனியாக கூட்டணிப் பேச்சு நடத்தி வருகிறார்கள்.
இதனால் மாநிலத்தில் தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகச் செய்து வருகின்றன.
இதில் பாஜகவுக்கும், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான் இந்தத் தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளின் தலைவர்களும் அறிக்கையில் ஒருவொருக்கொருவர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கொல்கத்தா வந்தபோது அவரின் பாதுகாப்பு வாகனத்தின் மீது சிலர் கல் வீசித் தாக்கினார்கள். இதனால் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியது.
இதையடுத்து, மாநிலத்தில் உள்ள 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்தியப் பணிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அழைத்தது. ஆனால், இதற்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் மத்துவா சமூகத்தினர் அதிகமாக இருப்பதால், அவர்களின் வாக்குகளைக் கவர சிஏஏ சட்டத்தை விரைவில் மாநிலத்தில் அமல்படுத்துவோம் என பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது.
மத்துவா சமூகத்தினர் வங்கதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து மேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள். ஏறக்குறைய 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இந்தப் பிரிவினர் பரவலாக வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோருக்குக் குடியுரிமை இல்லை எனக் கூறப்படுகிறது. இவர்களுக்கு குடியுரிமை வழங்க பாஜக முயல்கிறது.
வடக்கு 24 பர்கானாவில் உள்ள தாக்கூர் நகருக்கு நேற்று பாஜக தேசியப் பொதுச் செயலாளர் விஜய் வர்க்கியா சென்றார். அப்போது அவர் பேசுகையில், “மாநிலத்தில் விரைவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும். மேற்கு வங்க அரசு அமல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும் மத்திய அரசு அமல்படுத்தும். மாநில அரசு ஒத்துழைத்தால் அனைத்தும் எளிதாக அமையும்” எனத் தெரிவித்தார்.
கடந்த இரு மாதங்களுக்கு முன் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கொல்கத்தாவுக்கு வந்திருந்தபோது அளித்த பேட்டியில், “குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் சிஏஏ சட்டம் அதன் தன்மை மாறாமல் நடைமுறைப்படுத்தப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
பாஜக எம்.பி. சாந்தனு தாக்கூர் கூறுகையில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மாத இறுதியில் மேற்கு வங்கம் வருகிறார். அவரின் பயணத்தின்போது, மாநிலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலாவது குறித்து உறுதியான அறிவிப்பு வெளியாகும்” எனத் தெரிவித்தார்.