கரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தவுடன், கேரள மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
மாநிலத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஏற்கெனவே தமிழகம், மத்தியப் பிரதேச மாநிலங்கள் அறிவித்துள்ள நிலையில், கேரள மாநிலமும் அறிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, கரோனா தடுப்பூசி தயாரிப்பில் பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்ட்டியூட், பைஸர் ஆகிய நிறுவனங்களின் மருந்துகள் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்த மூன்று நிறுவனங்களுக்கும் விரைவாக ஒப்புதல் கிடைக்கலாம். 5 தடுப்பு மருந்துகள் பல்வேறு கிளினிக்கல் பரிசோதனையில் இருக்கின்றன.
இந்நிலையில் கண்ணூரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், மாநில மக்களுக்குக் கரோனா தடுப்பூசியை இலவசமாக அரசு வழங்குமா என நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், “கரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தபின், கேரள மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும். மக்களிடம் இருந்து எந்தக் கட்டணமும் அரசு வாங்காது. இலவசமாகத் தடுப்பூசி போடப்படும். இதுதான் எங்களின் நிலைப்பாடு.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கும் என்பது தெரியவில்லை. உண்மை என்னவென்றால் கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருவது, பெரிய நிம்மதி அளிக்கிறது.
உள்ளாட்சித் தேர்தல் நடந்து வரும் நேரத்தில் இது நல்ல விஷயம். இருகட்டத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இந்தத் தேர்தலுக்குப் பின் கரோனா பாதிப்பு உயருமா என்பது இனிவரும் நாட்களில்தான் தெரியும்.
ஒருவேளை கரோனாவில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயராமல் தற்போது இருக்கும் நிலை அதாவது குறைந்துவரும் நிலை தொடர்ந்தால், கரோனா பாதிப்பு குறையத் தொடங்கும்” எனத் தெரிவித்தார்.
கேரளாவில் கரோனா வைரஸ் பரவல் 2-ம் கட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டும் 5,949 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர், 32 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த பாதிப்பு 6.64 லட்சமாக உயர்ந்து, உயிரிழப்பு 2,594 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.