டெல்லியின் எல்லையில் போராடும் விவசாயிகள் ரொட்டி தயாரிக்கவும், துணி துவைக்கவும் நவீன இயந்திரங்களை அமைத்துப் பயன்படுத்துகின்றனர். இதனால், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் அனைவருக்கும் பெரும் உதவி கிடைத்து வருகிறது.
மத்திய அரசின் மூன்று வேளாண் மசோதாக்களை வாபஸ் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. இன்று 17-வது நாளாக நடைபெறும் இப்போராட்டத்திற்காக விவசாயிகள் இதுவரை இல்லாத வகையில் பலவகையான முன்னேற்பாடுகளைச் செய்துள்ளனர்.
சுமார் ஆறு மாதங்களுக்கான உணவு மற்றும் தானியங்களைத் தன்னுடன் கொண்டுவந்துள்ள விவசாயிகள் டெல்லியில் எல்லைகளான டிக்ரி மற்றும் சிங்கு ஆகிய பகுதிகளில் முக்கிய முகாம்கள் அமைத்துள்ளனர்.
இங்கு முன்கூட்டியே நன்கு திட்டமிட்ட வகையில் மின்சாரத்திற்காக ஜெனரேட்டர்களை வாகனங்களில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். இதன் உதவியால் ஒவ்வொரு முகாம்களிலும் உள்ள சுமார் 20,000 விவசாயிகளுக்கு நவீன ரொட்டி தயாரிக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இதன் மூலம், சில நொடிகளில் சுமார் இரண்டாயிரம் ரொட்டிகள் தானாகவே தயாராகி விழுகின்றன. இதற்குத் தேவையான தண்ணீர் மற்றும் கோதுமை மாவு மட்டும் அவ்வப்போது இயந்திரத்தில் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் டிக்ரி போராட்ட முகாம்வாசியான நவ்தீப்சிங் கூறும்போது, ''இந்த வகை இயந்திரங்கள் பஞ்சாபின் குருத்துவாராக்களில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஒரே சமயத்தில் உணவளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எங்களுக்கு எத்தனை மாதம் போராட வேண்டி இருந்தாலும் சமாளிக்க இதுபோன்றவை உதவும்'' எனத் தெரிவித்தார்.
இந்த ரொட்டி இயந்திரத்தின் வீடியோ பதிவுகளும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகி வருகின்றன. இதேபோல், போராட்ட முகாம்களில் உள்ள விவசாயிகளின் துணிகளைத் துவைக்கவும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விவசாயப் பொறுப்பை ஏற்ற பெண்கள்
போராட்டத்திலுள்ள விவசாயிகள் செய்திகளை அறிந்துகொள்ள வைஃபை இணையதள வசதி மூலமாக தொலைக்காட்சிகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. போராட்டத்திலுள்ள விவசாயிகளின் நிலங்களில் அவர்களது குடும்பத்தாரின் பெண்கள் பயிர் செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளனர்.
இதனால், எந்தக் கவலையும் இன்றி தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் ஒன்றே குறிக்கோளாக விவசாயிகள் இருந்து வருகின்றனர். இவர்கள் செய்துள்ள ஏற்பாடுகள் இதுவரை உலகின் எந்த நாடுகளிலும் செய்யப்படவில்லை எனக் கருதப்படுகிறது.
எனவே, வரும் காலங்களில் இது போராட்டம் நடத்தும் அமைப்புகளுக்கு ஒரு முன் உதாரணமாக அமையும் வாய்ப்புகள் தெரிகின்றன. இதற்காக விவசாயிகளுக்கு அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் உள்ளிட்டோர் பாரபட்சமின்றி உதவி வருவதும் குறிப்பிடத்தக்கது.