சட்டம்- ஒழுங்கு என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவது. அந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகத்துக்கும், அமைச்சருக்கும் நாங்கள் பதில் சொல்லக் கடமைப்படவில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை கொறடாவுமான கல்யாண் பானர்ஜி, உள்துறைச் செயலாளர் அஜய் பல்லாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்ட சம்பவத்தில் மேற்கு வங்கத் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு உள்துறை அமைச்சகம் வரும் 14-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது. அதற்குப் பதில் அளித்து கல்யாண் பானர்ஜி உள்துறை அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில் இது தெரிவிக்கப்பட்டது.
மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லாவுக்கு கல்யாண் பானர்ஜி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மத்திய அரசு தனது கடுமையான நடவடிக்கையால் மாநில அரசு நிர்வாகத்தை மிரட்ட முயல்கிறது. அதனால்தான் தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது.
சட்டம் - ஒழுங்கு என்பது மாநில அரசுக்குக் கட்டுப்படட்து. அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 7-ன் கீழ் மாநிலப் பட்டியலில் சட்டம்- ஒழுங்கு இருக்கிறது என்பதை நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். அப்படி இருக்கும்போது தலைமைச் செயலாளரையும், டிஜிபியையும் சட்டம்- ஒழுங்கு குறித்து ஆலோசிக்க எவ்வாறு அழைத்தீர்கள்?
அரசியல் உள்நோக்கத்தோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த உங்கள் துறையின் அமைச்சரால் இந்த சம்மனை அனுப்பியுள்ளீர்கள். அரசியல் பழிவாங்கும் நோக்கில் மேற்கு வங்க அதிகாரிகளை நீங்கள் கொடுமைப்படுத்த முயல்கிறீர்கள். இது கூட்டாட்சிக் கட்டமைப்பில் தலையிடுவதாகும்.
சட்டம்- ஒழுங்கைப் பொறுத்தவரை, மாநில அரசு சட்டப்பேரவைக்குப் பதில் சொல்லத்தான் கடமைப்பட்டுள்ளது. ஆனால், உங்களுக்கும், உங்கள் உள்துறை அமைச்சருக்கும் பதில் சொல்லக் கடமைப்படவில்லை.
பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவின் நடவடிக்கையால் , சட்டங்கள் ஆற்றில் வீசப்பட்டுள்ளன. மாநிலத்தில் அவசர நிலையைக் கொண்டுவர மறைமுகமான முயற்சிகள் நடக்கின்றன. நாடாளுமன்றம் நடக்கவில்லை. மத்திய அரசின் இந்தச் செயலுக்கு இந்தக் கடிதம் மூலம் கடுமையான எதிர்ப்பை நாங்கள் பதிவு செய்கிறோம்''.
இவ்வாறு கல்யாண் பானர்ஜி தெரிவித்துள்ளார்.