மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களின் எல்லையில் சம்பல் பள்ளத்தாக்குகள் உள்ளன. இவற்றை மறைவிடமாகக் கொண்டு 1960-ம்ஆண்டு முதல் 2012 வரை கொள்ளையர்கள் வாழ்ந்தனர். இவர்கள் சம்பல் கொள்ளையர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
இவர்களில் பெரும்பாலானோர் உயர் சமூகத்தினரால்பாதிக்கப்பட்டு ஆயுதம் ஏந்தியவர்கள் ஆவர். இவர்களில் மொஹர்சிங், பூலான் தேவி, பான்சிங் தோமர், நிரூபய்சிங் குஜ்ஜர், தத்துவா உள்ளிட்ட பலரும் பிரபலமாக விளங்கினர்.
செல்வந்தர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு வாரி வழங்கும் வழக்கமுடைய இவர்களுக்கு பொதுமக்களின் ஆதரவும், பாதுகாப்பும் கிடைத்தது. இதனால், மத்திய, மாநில அரசுகளுக்கு இவர்கள் சவாலாக விளங்கினர். இவர்களின் வாழ்க்கையை ஆதாரமாக வைத்து இந்தி திரைப்படங்கள் பல வெளியாகி வந்தன. இதில் உ.பி.யின் புந்தேல்கண்டில் வாழ்ந்த கப்பார்சிங் என்ற கொள்ளையனின் கதையே ‘ஷோலே’ என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது. இதையடுத்து பூலான் தேவி, பான்சிங் தோமர் ஆகியோரின் கதைகளும் பாலிவுட்டில் பிரபலமானது.
உ.பி.யில் போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட தத்துவா என்ற கொள்ளையனுக்கு அம்மாநிலத்தின் பாந்தாவில் ஒரு கோயிலும் கட்டப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் உ.பி., ம.பி. மற்றும் ராஜஸ்தானில் நடைபெறும் தேர்தல்களில் சம்பல் கொள்ளையர்கள் சுட்டிக்காட்டும் வேட்பாளர்களே வெற்றி பெறும் சூழல் நிலவியது. பிறகு அரசியலிலும் குதித்த பலரில் பூலான் தேவி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகளாகவும் பலர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் எண்ணிக்கை தற்போது ஒன்றிரண்டாக சுருங்கி விட்டது. எனினும் இவர்கள் தீவிரம் காட்டிய காலகட்டம் குறித்து இப்போதும் சம்பல் பகுதிகளில் உள்ள வீடுகளில் கதைகளாகப் பேசப்படுகின்றன. இவர்களை என்கவுன்ட்டரில் வேட்டையாடி ஒழித்துக் கட்டி யதில் மூன்று மாநில காவல் துறைகளின் பங்கும், பூலான் தேவி போன்ற கொள்ளையர்களிடம் வினோபாவே, ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட பொது நலவாதிகள் பேசி 1980 முதல் 1990 வரை சரணடைய வைத்ததும் வரலாறு ஆகிவிட்டது.
எனவே இவர்களில் முக்கிய மான 80 கொள்ளையர் கும் பலின் உண்மைக் கதைகள் தொடர்பான புகைப்படங்களுடன் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இதில், அக்கொள்ளையர்கள் பயன்படுத்திய துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், உடைகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன. ம.பி.யில்சம்பல் பகுதியின் குவாலியர் அருகே பிந்த் நகரில் பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்ட ஒருகட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைகிறது.