பாரதியார் பிறந்த நாள் தில்லித் தமிழ்ச் சங்கத்தினரால் இன்று புதுடெல்லியில் கொண்டாடப்பட்டது. அச்சங்கத்தின் சார்பில் டெல்லியிலுள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவரான வானதி சீனிவாசனும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் மலர் தூவி மரியாதை செய்தனர்.
இன்று மகாகவி பாரதியாரின் 139-வது பிறந்த நாள். டெல்லியில் ரமண மகரிஷி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முக்கிய விருந்தினர்களாக முன்னாள் மத்தியத்துறை அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவருமான ஜி.கே.வாசன் எம்.பி. கலந்து கொண்டார்.
மற்றொரு முக்கிய விருந்தினராக பாஜக தேசிய மகளிரணித் தலைவரான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். இவ்விருவரும் பாரதியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசுகையில், ''நூறு ஆண்டுகளுக்கு முன்பே உணவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று பாடியவர் பாரதி. தனது கவிதைகளில் பாரதி முன்வைத்த வலிமையான கருத்துகள் இன்றும் போற்றக்கூடியவை'' எனத் தெரிவித்தார்
இதே நிகழ்வில் பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் பேசும்போது, ''மகாகவி சுப்பிரமணிய பாரதி தமிழரின் மிகச் சிறந்த அடையாளமாகத் திகழ்பவர். அவரது கவிதைகள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட எனக்கு பாரதியின் எழுத்துகள் பல மாற்றங்களை ஏற்படுத்தின'' என்றார்.
தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலையும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். எழுத்தால் மக்களிடையை புரட்சிகளை ஏற்படுத்திய பாரதி ஒரு பகுத்தறிவாதி என்று அவர் குறிப்பிட்டார்.
அகில இந்திய தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளர், ஆர்.முகுந்தன், தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ரெங்கநாதன், துணைத் தலைவர் பி.குருமூர்த்தி, இணைச் செயலாளர் ஜோதி பெருமாள், குர்காவூன் தமிழ்ச் சங்கத் தலைவர் சக்தி பெருமாள் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர்.