மேகாலயா மாநில முதல்வர் கான்ராட் கே சங்மாவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இத்தகவலை முதல்வரும் உறுதி செய்து ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 3.63 லட்சமாகக் (3,63,749) குறைந்தது. கடந்த 146 நாட்களில் இது மிகவும் குறைவான எண்ணிக்கை ஆகும். இந்நிலையில் மேகாலயா முதல்வருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா கூறியுள்ளதாவது:
"நான் கரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டபோது தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது . கரோனா தொற்றின் லேசான அறிகுறிகள் இருந்ததால் நான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன்.
கடந்த 5 நாட்களில் என்னுடன் நேரடியாகத் தொடர்பில் இருந்த அனைவரையும் அவர்களின் உடல்நிலை குறித்து தயவுசெய்து கண்காணிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்,
தேவைப்பட்டால் பரிசோதனை செய்யுங்கள். பாதுகாப்பாக இருங்கள்”.
இவ்வாறு மேகாலயா முதல்வர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அவரது அமைச்சரவை சகாக்கள் - சுகாதார அமைச்சர் ஏ.எல். ஹெக் மற்றும் நகர விவகாரத்துறை அமைச்சர் ஸ்னாவ்பாலங் தார் ஆகியோருக்கும் கரோனா சோதனையில் வைரஸ் தொற்று ஏற்பட்டதும் கண்டறியப்பட்டது.