மம்தா பானர்ஜியை எதிர்த்து மும்பையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்| படம்: ஏஎன்ஐ. 
இந்தியா

மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியைக் கலைக்கக் கோரி மும்பையில் பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

ஏஎன்ஐ

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியைக் கலைக்கக் கோரி மும்பையில் பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக மகாராஷ்டிர ஆளுநரிடம் முறையிட உள்ளனர்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்கத்துக்கு நேற்று முன்தினம் சென்றார். கொல்கத்தாவிலிருந்து டைமண்ட் ஹார்பர் தொகுதிக்குச் சென்றபோது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் நட்டாவின் பாதுகாப்பு வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர் என்று பாஜக சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, மாநிலத் தலைமைச் செயலாளர், காவல்துறை டிஜிபி ஆகியோர் வரும் 14-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

நேற்று நடந்த தாக்குதல் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது நடவடிக்கை எடுக்க மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கு ஒரு மனுவை அளிக்க பாஜக தொண்டர்கள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக அணிவகுத்துச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பாஜக தொண்டர்களுடன் 'இந்திய பெங்காலி குடிமக்கள்' என்ற அமைப்பின் உறுப்பினர்களும் இணைந்தனர்.

பாஜக தொண்டர்கள் மேற்கு வங்க முதல்வரின் உருவ பொம்மையை எரித்தனர். மம்தாவின் படங்கள் அடங்கிய போஸ்டர்களில் கறுப்பு மை ஊற்றி, மேற்கு வங்க அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து பேசிய மும்பை பாஜக எம்எல்ஏவும் செய்தித் தொடர்பாளருமான ராம் கதம் கூறுகையில், "நாங்கள் இன்று ராஜ் பவனுக்குச் சென்று ஆளுநரைச் சந்திக்க உள்ளோம். மேற்கு வங்கத்தில் பகல் நேரத்திலேயே சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பொது அமைப்புகளின் குரல்வளைகள் நெரிக்கப்பட்டு வருகின்றன. எனவே இப்பிரச்சினையை குடியரசுத் தலைவரிடம் எடுத்துச் சென்று மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்வோம்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT