இந்தியா

பாஜகவிற்கு எதிராக உருவாகும் எதிர்கட்சிகள் அணிக்கு தலைமை ஏற்கிறார் சரத்பவார்: துணை தலைவர்களாக மு.க.ஸ்டாலின், தேஜஸ்வீ, ஹேமந்த் சோரன்

ஆர்.ஷபிமுன்னா

பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சிகள் அடங்கிய புதிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) அணி உருவாகிறது. இதற்கு தலைவராக சரத்பவார் தலைவராகவும், துணைத்தலைவராக மு.க.ஸ்டாலின், தேஜஸ்வீ பிரசாத் யாதவ் மற்றும் ஹேமந்த் சோரன் இடம் பெறுகிறார்கள்.

காங்கிரஸ் தலைமையில் அமைந்து செயல்பட்டு வரும் யுபிஏ, புதிதாக மாற்றி அமைக்கப்படுகிறது. இதுவரையிலும் அதற்கு தலைமை ஏற்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார்.

இதன் புதிய தலைவராக யுபிஏவின் உறுப்பினரான தேசியவாதக் காங்கிரஸின் சரத்பவார் பொறுப்பேற்க உள்ளார். இதற்கு முதன் முறையாக மூன்று துணைத்தலைவர்கள் அமர்த்தப்பட உள்ளனர்.

இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், லாலுவின் மகனும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரான தேஜஸ்வீ மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவருமான ஹேமந்த் சோரன் ஆகியோர் இடம்பெற உள்ளனர்.

இவர்களில் ஹேமந்த் சோரண், ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் அமைச்சராக உள்ளார். இப்புதிய யுபிஏவிற்கு ராகுல் காந்தியையும் தலைவராக பரிசீலனை செய்யப்பட்டது.

அவர் காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியையே இன்னும் ஏற்கவில்லை என்பதால், வேறு ஒரு மூத்த தலைவரை அமர்த்த முடிவு செய்யப்பட்டது. இதில் பொறுத்தமான மூத்த தலைவரான சரத்பவார் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் காங்கிரஸ் தலைமையின் வட்டாரம் தெரிவிக்கையில், ‘சோனியாவிற்கு உடல்நிலை சரியில்லாமையால் இந்த புதிய ஏற்பாடு செய்யப்படுகிறது.

யுபிஏவை மாற்றி அமைப்பதற்கான துவக்கக்கட்டப் பேச்சுவார்த்தை ஏற்கெனவே முடிந்து விட்டது. இதற்கு எங்கள் தலைவர்களான சோனியாவும், ராகுலும் கூட பச்சை கொடி காட்டி விட்டனர்.

பிஹாரின் சட்டப்பேரவை மற்றும் ஐதராபாத் மாநகராட்சியிலும் காங்கிரஸ் மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுள்ளது. எனவே, அதன் கைகளில் இருந்த யுபிஏவை வேறு கட்சி தலைவரிடம் ஒப்படைப்பதை தவிர வேறு வழியில்லை.’ எனத் தெரிவித்தனர்.

இதன் தலைவராக சரத்பவார் பொறுப்பேற்றாலும், காங்கிரஸின் ராகுல் காந்திக்கு யுபிஏவில் அதிக முக்கியத்துவம் இருக்கும் எனக் கருதப்படுகிறது. இக்கட்சியின் தலைவர் சோனியா ஒரு மூத்த ஆலோசகராக யுபிஏவில் தொடரும் வாய்ப்புகளும் உள்ளன.

புதிய வடிவம் எடுக்க முயலும் யுபிஏவில் திரிணமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி மற்றும் சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகளும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஹாரில் பாஜக ஆதரவுடன் முதல்வராக இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமாரும் வரும் நாட்களில் தேசிய ஜனநாயக முன்னணியில் (என்டிஏ) இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இவர்களுடன் நட்புறவில் இருக்கும் மு.க.ஸ்டாலினால் அனைவரையும் யுபிஏவில் இழுக்க முடியும் எனக் கருதப்படுகிறது. இவருக்கு லாலுவின் மகனான தேஜஸ்வீயும் துணை இருக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

காங்கிரஸில் சோனியாவை எதிர்த்து கட்சியில் இருந்து வெளியேறிய சரத்பவார், புதிதாக தேசியவாத காங்கிரஸ் துவக்கி நடத்தி வருகிறார். தொடர்ந்து காங்கிரஸுடன் கூட்டணி வைத்து மத்திய அமைச்சராகவும் பல முறை வகித்ததால் அவருக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் இருப்பதாகவும் கருதப்படுகிறது.

மகராஷ்டிராவில் சிவசேனாவுடன் காங்கிரஸையும் இணைத்து ஆட்சி அமைக்க காரணமாக இருந்தவர் சரத்பவார். இதனால், முதன்முறையாக என்டிஏவில் பிளவை ஏற்படுத்தி சிவசேனா கூட்டணியிலிருந்து வெளியேறியது.

இடதுசாரிகளுடனும் நெருங்கிய நட்புறவில் உள்ள சரத்பவார் புதிய யுபிஏவிற்கு தேர்வு செய்யப்படுவதை எதிர்கட்சிகளில் இதுவரை எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. புதிய தலைவர்களுக்கான யுபிஏவின் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

SCROLL FOR NEXT