இந்தியா

கொலை மிரட்டல் புகார் எதிரொலி: ஸ்வப்னா அடைக்கப்பட்டுள்ள சிறையின் சிசிடிவி காட்சி ஆய்வு

செய்திப்பிரிவு

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷ், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக மனு தாக்கல் செய்ததையடுத்து, அவர் அடைக்கப்பட்டுள்ள சிறையின் சிசிடிவி கேமரா காட்சிகள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன.

கேரள தங்கக் கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில், சிறையில் தன்னை பார்க்க வரும் சிலர், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், ஸ்வப்னா சுரேஷ் அடைக்கப்பட்டுள்ள அட்டகுளங்கரா பெண்கள் சிறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சிறைத் துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். இதுதொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT