ஏலூரு: ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டம், ஏலூரு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் மர்ம நோய் பரவியது.
காய்ச்சல், தலைவலி, மயக்கம், வலிப்பு போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு, ஒருவர் பின் ஒருவராக இதுவரை 600 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 528 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.72 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் உட்பட நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்தும் மருத்துவ நிபுணர்கள் ஏலூருவில் குவிந்தனர். ஏலூரு பகுதியில் விநியோகிக்கப்படும் தண்ணீர், பால் ஆகியவற்றின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் ஈயம் போன்ற ஒருவித ரசாயனம் கலந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறினர். இந்த மர்ம நோய்க்கு ஏற்கெனவே ஒருவர் உயிரிழந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு விஜயவாடா மற்றும் குண்டூரில் தலா ஒருவர் உயிரிழந்தனர். இதனால் இந்த நோய்க்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.