பாகிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்ட 11 கிலோ ஹெராயின் போதைப் பொருளை எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) நேற்று கைப்பற்றியது. சர்வதேச சந்தை மதிப்பில் இதன் மதிப்பு ரூ.55 கோடி ஆகும்.
இதுகுறித்து பிஎஸ்எப் டிஐஜி (பஞ்சாப் எல்லை) ஆர்.எஸ். கட்டாரியா கூறும்போது, “அமிர்தசரஸ் செக்டார், அட்டாரி எல்லைக்கு அருகில் ஒரு வயலில் இருந்து 9 பாக்கெட் ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இந்தப் பாக்கெட்டுகள் பாகிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்டு இந்தியப் பகுதிக்குள் வீசப்பட்டுள்ளன. இதனுடன் ஒரு மொபைல் போனும் பாகிஸ்தானிய சிம் கார்டும் எடுக்கப்பட்டன.
மற்றொரு சம்பவத்தில் பெரோஸ்பூர் செக்டார் டி.டீ. மால் எல்லைச் சாவடிக்கு அருகில் 2 பாக்கெட் ஹெராயின் 4 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன.
தலா 1 கிலோ எடை கொண்ட இந்த 11 பாக்கெட்டுகளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.55 கோடி ஆகும். இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.
பஞ்சாப் முழுவதும் சர்வதேச எல்லைப் பகுதியில் இந்த ஆண்டு இதுவரை 207 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பிஎஸ்எப் கைப்பற்றியுள்ளது” என்றார்.