விவசாயிகளின் கோரிக்கைக்குத் தீர்வு காணப்படாமல் இருந்தால், மத்திய அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தைத் தொடங்குவேன் என்று விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர்ந்து 14 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி-ஹரியாணா எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடும் குளிரிலும் வெளியிலும் போராட்டம் நடத்தி வருவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5-கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் தீர்மானமாக உள்ளனர். வரும் 14-ம் தேதிக்குப் பின் நாடு முழுவதும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் விவசாயிகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே விவசாயிகளுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அன்னா ஹசாரே அளித்த பேட்டியில் கூறியதாவது:
''நான் நடத்திய லோக்பால் அந்தோலன் (மக்கள் இயக்கம்) போராட்டத்தில்தான் காங்கிரஸ் அரசு அதிர்ந்தது. இந்த விவாசயிகள் போராட்டமும் அதேபோன்றுதான் இருப்பதாகவே பார்க்கிறேன். பாரத் பந்த் நடந்தபோது, என்னுடைய கிராமமான ரேலேகான் சித்தியில் போராட்டம் நடத்தினேன். விவசாயிகளுக்கு ஆதரவாக அன்றைய தினம் உண்ணாவிரதமும் இருந்தேன்.
விசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டால், நான் மீண்டும் 'ஜன் அந்தோலன்' (மக்கள் போராட்டம்) நடத்த வேண்டியது இருக்கும். இது லோக்பால் சட்டத்துக்காக நான் நடத்தியதைப்போல் இருக்கும் என மத்திய அரசை எச்சரிக்கிறேன்.
டெல்லியில் நடக்கும் போராட்டம் அனைத்தும் அஹிம்சை வழியில் நடக்க வேண்டும் என்று நான் விவசாயிகளைக் கேட்டுக்கொள்கிறேன். போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் அமைதி வழியில் போராடி, காந்தியக் கொள்கையின்படி நடக்க வேண்டும்.
வேளாண்மையைப் பெரும்பான்மையாகச் சார்ந்திருக்கும் நமது நாட்டில் விவசாயிகளுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்படக் கூடாது. அவ்வாறு அரசு சட்டம் இயற்றினால், விவசாயிகளின் போராட்டம் நியாயமானதுதான்''.
இவ்வாறு அன்னா ஹசாரே தெரிவித்தார்.