திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வரு கிறது. வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவின் 2-ம் நாளான நேற்று காலையில் வாசுகி யாக கருதப்படும் சின்ன சேஷ வாகனத்தில், உற்சவரான மலையப்பர், வேணுகோபாலன் அலங்காரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாகன சேவையின் முன்பு யானை, குதிரை, காளை போன்ற பரிவட்டங்கள் சென்றன. மேள தாளங்களுடன் பல மாநில நடனக் கலைஞர்கள், மயிலாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம் போன்ற பல நடனங்கள் ஆடிச் சென்றனர். மேலும் ஜீயர் குழுவினர் 4 ஆயிரம் திவ்ய பிரபந்தங்களை பாடினர்.
மேலும் வேத பண்டிதர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இரவு, அன்ன வாகனத்தில் உற்சவர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.