இந்தியா

இந்தோ-கங்கை சமவெளியின் மென்மையான படிவுகள் நிலநடுக்கத் தாக்கத்தை அதிகரிக்கின்றன

ஒய்.மல்லிகார்ஜுன்

ஆப்கான் இந்துகுஷ் மலைப்பகுதியில் சுமார் 196 கிமீ ஆழத்தில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து வட இந்தியாவில் பல பகுதிகளில் தாக்கம் ஏற்பட்டதற்குக் காரணம் இந்தோ-கங்கை சமவெளியின் மென்மையான படிவுகளே என்று சி.எஸ்.ஐ.ஆர். தேசிய புவி-பவுதிக ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.

7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் குறிப்பிடத்தகுந்த ஆற்றல் அதிலிருந்து அலைகளாகக் கிளம்பியது. இதனையடுத்து பாகிஸ்தான், ஆப்கான், வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பூமி சில நிமிடங்கள் குலுங்கியது.

இது குறித்து சி.எஸ்.ஐ.ஆர். ஆய்வுக் கழக தலைமை விஞ்ஞானி டி.ஸ்ரீநாகேஷ் கூறும்போது, பூகம்ப அலைகள் பிரயாணிக்கும் பெரும்பகுதி வட இந்திய சமவெளிகளில் மென்மையான படிவுகள் கொண்ட மண்பகுதியாக உள்ளது. டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர், உ.பி. பிஹார் மேற்குப் பகுதிகளுடன் அகமதாபாத், வதோதராவின் சில பகுதிகள், காத்மாண்டூ மற்றும் சிக்கிமிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

இந்துகுஷ் மலைப்பகுதி அபாயகரமான நிலநடுக்கப் பகுதி என்றார்.

இந்துகுஷ் மலைப்பகுதியின் நிலநடுக்க தலைமை ஆய்வாளர் என்.பூர்ணசந்திர ராவ் கூறும்போது, இப்பகுதி 10-20 கிமீ ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்களை விட அதி தீவிர ஆற்றல் அலைகளை ஏற்படுத்தும் ஆழமான நிலநடுக்கங்கள் ஏற்படும் தன்மை கொண்டது. சாதாரணமாக இவ்வளவு ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கத்தினால் வெளியாகும் ஆற்றல் அலைகள் பூமியின் மேற்பகுதியை எட்டும் முன் கொஞ்சம் பலவீனமடைவது வழக்கம்.

ஆனால், ஏப்ரல் 25ம் தேதி நேபாளத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரைக் குடித்து கடும் சேதங்களை ஏற்படுத்திய இமாலய பூகம்பத்தையடுத்து, இனி இப்பகுதியில் வரும் பூகம்பங்கள் இதன் மையத்திலிருந்து மேற்குப் பகுதியில் ஏற்படும் என்று தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அப்போது தெரிவித்த ஐதராபாத், தேசிய புவி-பவுதிக ஆய்வுக் கழக ஆய்வாளர் டாக்டர் டி.கே.சத்தா கூறியது தற்போது உண்மையாகியுள்ளது.

SCROLL FOR NEXT