இந்தியா

1,300 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்ய திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு

என்.மகேஷ் குமார்

திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக பக்தர்கள் வழங்கிய 1,300 கிலோ எடையுள்ள தங்க நகைகளை, அரசு வங்கிகளில் டெபாசிட் செய்து, வட்டியாக தங்கம் ஈட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து பரகாமணி உதவி அதிகாரி வரலட்சுமி கூறுகையில்:

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் நேர்த்தி கடனாக பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு டாலர்கள் போன்றவற்றை உண்டி யலில் காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.

அரசர் காலங்கள் முதல் ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள வைரம், வைடூரியம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள் பொதிக்கப்பட்ட பல ஆபரணங்கள் திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை நிர்வாக அலுவலகத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் சில மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளும் முக்கிய நாட்களில் அலங்காரம் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.

சில பக்தர்கள் பண்டைய காலத்தில், வைரம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்களையும் சுவாமிக்கு காணிக்கையாக வழங்கி உள்ளனர். விலை மதிக்க இயலாத, சுமார் 200 டன் எடையுள்ள இந்தக் கற்களும் மிகவும் பாதுக்காப்பாக பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.

சுவாமிக்கு மாதந்தோறும் 30 முதல் 40 கிலோ வரை தங்க நகைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

இதில் 100 முதல் 150 தங்க தாலிகளை பெண்கள் மாதந் தோறும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். மாதத்தில் சுமார் 75 கிலோ வெள்ளியும் காணிக்கையாக வருகிறது. இதில் கற்கள் பொதித்த நகைகளை தனியாக பிரித்தெடுக்கின்றனர்.

இவை தற்போது 500 முதல் 600 கிலோ வரை உள்ளன. இதுபோன்று உண்டியலில் காணிக்கையாக வரும் தங்க நகைகளை (கற்கள் அல்லாதவை மட்டும்) தேவஸ்தானம் அரசு வங்கிகள் டெபாசிட் செய்து வருகிறது.

இதுவரை 4,500 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இவைகள் மூலம் தங்கம் வட்டியாக பெறப்படுகிறது.

அதுபோல், மாதந்தோறும் 18 கிலோ தங்கம் வட்டியாக தேவஸ்தானத்துக்கு வங்கிகள் வழங்குகின்றன. இவை மீண்டும் அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இதனால் தங்கத்துக்கு தங்கம் என கூடிக்கொண்டே போகிறது.

தற்போது, 1,300 முதல் 1,600 கிலோ வரை தங்க நகைகள் இருப்பில் உள்ளன. இதில் 1,300 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இவற்றையும் டெபாசிட் செய்தால், கூடுதலாக தங்கம் வட்டியாக கிடைக்கும். இவ்வாறு தேவஸ்தான அதிகாரி வரலட்சுமி கூறினார்.

காணிக்கையாக பெறப் பட்ட வெளிநாட்டு நாணயங் கள் இதுவரை நமது இந்திய ரூபாய்களாக மாற்றப்படாமலேயே உள்ளன. இவை 60 முதல் 70 டன் வரை நிலுவையில் உள்ளன. மேலும் உண்டியலில் செலுத்தப்படும் 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் ஆகியவையும் எண்ணப்படாமல் மூட்டை மூட்டைகளாக கிடங்குகளில் உள்ளன.

பக்தர்களுக்கு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இவற்றைப் பயன்படுத்த வேண்டும் என தேவஸ்தானத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT