பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில், மக்கள், ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், காவல் துறை உயரதிகாரிகள் என அனைத்துத் தரப்பினரையும் இணைக்கும் புதிய மொபைல் ‘ஆப்’-ஐ டெல்லி காவல் துறை விரைவில் வெளியிட உள்ளது.
டெல்லி காவல் துறை பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஏற்கெனவே சில ‘ஆப்’களை வெளியிட்டுள்ளது. இவற்றில் பெண்கள் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்ட ‘ஹிம்மத் ஆப்’ முக்கியமானதாக கருதப்படுகிறது.
டெல்லிப்பகுதி மக்களுக்காக தற்போது புதிய ‘ஆப்’ வெளியிட டெல்லி காவல் துறை திட்டமிட்டுள்ளது. ஆபத்து சமயத்தில் ஒருவர் இந்த ஆப்பைப் பயன்
படுத்தும்போது, தொடர்புடைய பாதுகாப்பு காவலர்கள் அனைவரது தொலைபேசிக்கும் குறுஞ்செய்தி செல்லும்.
இதைவைத்து அதனைப் பயன்படுத்தியவருக்கு உரிய பாதுகாப்பு அல்லது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி காவல் துறையினர் கூறும்போது, “இந்த ‘ஆப்’பின் மூலம், ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தவரும் அப்பகுதி ரோந்துக் காவலர்கள் முதல் உயரதிகாரி வரை 24 மணி நேரமும் தொடர்பில் இருக்க முடியும். ஒரு புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதை உயரதிகாரி கண்காணிக்க முடியும். புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்படும்” என்றனர்.
இந்த ‘ஆப்’பில், ‘இ-புக்’ எனும் பெயரில் மற்றொரு வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரோந்து செல்லும் காவலர்கள் தன் பணி குறித்த நடவடிக்கைகளை அருகிலுள்ள காவல்நிலையம் சென்று அங்குள்ள பதிவேட்டில் பதிவு செய்வதற்குப் பதில், அவற்றை இ-புக்கில் பதிவு செய்யலாம். இதன் மூலம் அதிகாரிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் இவ்விவரங்களை அறிய முடியும். ரோந்து செல்லும் காவலர்களுக்கு ஸ்மார்ட் போன்கள், இந்த ஆப்பை பயன்படுத்துவதற்கான பயிற்சிகளை அளிக்க காவல் துறை திட்டமிட்டுள்ளது. இந்த ஆப் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.