காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் இன்று ( புதன்கிழமை ) அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் கடும் சண்டை ஏற்பட்டது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:
புல்வாமா மாவட்டத்தின் டிக்கன் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது குறித்து தகவல் கிடைத்ததையொட்டி பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். இன்று அதிகாலையில் டிக்கன் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள இடத்தில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அப்போது தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்கத் தொடங்கினர். பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து இந்த தேடல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது.
இந்த நடவடிக்கையில் இதுவரை இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், துப்பாக்கிச்சண்டையின் போது பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்தார்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் மற்றும் குழு இணைப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.