மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை நீக்கிவிடும் என்றும், மண்டிகள் இல்லாமல் பெரு நிறுவனங்களை நம்பி விவசாயிகள் இருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளி விடும் என்றும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 116 ஹரியாணா மாநில வேளாண் உற்பத்தி அமைப்புகளின் கூட்டமைப்பான ‘ஹர் கிஸான்’, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில், குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் ஏஎம்பிசி மண்டி முறை ஆகியவை தொடரும் பட்சத்தில் புதிய வேளாண் சட்டங்களை செயல்படுத்தலாம் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.