பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த லய்பா சபைர் மற்றும் சனா சபைர் சகோதரிகள் நேற்று வழித் தவறி இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்துவிட்டனர். அவர்களை இந்திய ராணுவத்தினர் பிடித்து உணவுகள் வழங்கி கவுரமாக நடத்தினர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதி எல்லைக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அந்த சகோதரிகளை நேற்று ஒப்படைத்தனர். படம்: பிடிஐ 
இந்தியா

இந்திய எல்லைக்குள் வழித்தவறி வந்த ஆக்கிரமிப்பு காஷ்மீர் சிறுமிகளை திருப்பி அனுப்பியது ராணுவம்

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் வழித்தவறி வந்த 2 சிறுமிகளை இந்திய ராணுவத்தினர் அந்நாட்டு அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து கடந்த திங்கட்கிழமை அதிகாலை இந்திய எல்லையான பூஞ்ச் பகுதிக்குள் 2 சிறுமிகள் நுழைந்தனர். சிசிடிவி கேமரா மூலம் அவர்களைக் கண்ட இந்திய ராணுவ வீரர்கள், அந்த சிறுமிகளை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கஹுதா பகுதியைச் சேர்ந்த லய்பா சபைர் (17) மற்றும் சனா சபைர் (13) என்பது தெரிய வந்தது. சகோதரிகளான இவர்கள், வழித்தவறி இந்த பகுதிக்கு வந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினரை தொடர்பு கொண்டு இந்திய ராணுவத்தினர் தகவலை தெரிவித்தனர். பின்னர், இரண்டு சிறுமிகளையும் சக்கன் தா பாஹ் எல்லைக்கு கொண்டு சென்ற ராணுவ வீரர்கள், பாகிஸ்தான் அதிகாரிகளிடம் அவர்களை ஒப்படைத்தனர்.

இதுகுறித்து சிறுமி லய்பா சபைர் கூறுகையில், “பூஞ்ச் எல்லைக்குள் நுழைந்ததுமே எங்களை ராணுவ வீரர்கள் பிடித்துவிட்டனர். விசாரணைக்கு பிறகு, நல்ல உணவுகளையும், பாதுகாப்பான தங்குமிடத்தையும் வழங்கினர். இந்திய மக்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள்” என்றார்.

SCROLL FOR NEXT