நாட்டின் வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள் அவசியம், சீர்திருத்தங்கள் மூலமே வளர்ச்சி கிடைக்கும், கடந்த நூற்றாண்டு சட்டங்கள் மூலம் எதிர்வரும் நூற்றாண்டைக் கட்டமைக்க முடியாது. அந்த சட்டங்கள் சுமையாகிவிட்டன என்று பிரதமர் மோடி சீர்திருத்தத்தின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திப் பேசினார்.
உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்தை காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
" தேசத்தின் வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள் அவசியம். கடந்த நூற்றாண்டில் இயற்றப்பட்ட சட்டங்களை வைத்துக்கொண்டு வரும் நூற்றாண்டை இந்தியா கட்டமைக்க முடியாது. சில புதிய வசதிகள், செயல்முறைகள், சீர்திருத்தங்கள் அவசியமானவை.
கடந்த நூற்றாண்டில் பழைய சட்டங்கள் பயன்அளித்திருக்கும். ஆனால், அடுத்த நூற்றாண்டில் இந்த சட்டங்கள் சுமையாக மாறிவிடும். இந்தக் காரணத்தால்தான், தொடர்ந்து சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த காலத்தை ஒப்பிடும்போது, சீர்திருத்தங்கள் சிறப்பாகச் செயல்படுவது குறித்து மக்கள் அடிக்கடி வியப்படைகிறார்கள்.
அதற்கு காரணம் எளிமையானது. முன்பெல்லாம், சீர்திருத்தங்கள் சில துறைகளுக்காக, துறைகளை முன்னிறுத்தி சிறிய அளவில் செய்யப்பட்டன. ஆனால், இன்று முழுமையாக அனைவரையும் மனதில் வைத்து சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன.
இந்தியா தன்னுடைய மெட்ரோ ரயில் நெட்வொர்க்கை மட்டும் விரிவுபடுத்தவில்லை. தன்னுடைய சொந்த மெட்ரோ பெட்டிகள் கட்டுமானத்தையும், சிக்னல் முறையையும் மேக் இன் இந்தியா திட்டத்தில் விரிவுபடுத்தியுள்ளது. மெட்ரோ நெட்வொர்க்கில் தற்சார்பு இந்தியா வந்துள்ளது”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டம் இரு வழிப்பாதைகளைக் கொண்டது. 29.4 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தால், தாஜ்மஹால், ஆக்ரோ கோட்டை, சிக்கந்தரா ரயில் நிலையம், பேருந்துநிலையம் ஆகியவற்றை இணைக்கும்.
5 ஆண்டுகளில் நிறைவடையும் இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.8,379.62 கோடியாகும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், 26 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள், 60 லட்சம் சுற்றுலாப்பயணிகள் ஆண்டுதோறும் வரக்கூடும்.