இந்தியா

டெல்லியில் கடும் குளிரிலும் விவசாயிகள் போராட்டம் 

செய்திப்பிரிவு

புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

விவசாய சங்கங்கள் சார்பில் நாளை நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடக்கிறது. இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 9-ம் தேதி குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளன.

மத்திய அரசு கடந்த செப்டம்பரில் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இந்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடும் எட்டப்படவில்லை. விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு வரும் 9-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதுதொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இணை அமைச்சர்கள் கைலாஷ் சவுத்ரி, புருஷோத்தம் ரூபலாவுடன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடர வும் சட்டங்களில் தேவையான திருத்தங்கள் செய்யவும் மத்திய அரசு முன்வந்த போதிலும் வேளாண் சட்டங்களை முழுமையாக நீக்கும்வரை போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் 12-வது நாளாக இன்றும் அவர்களது போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் திறந்த வெளியில் அவர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. நள்ளரவில் டெல்லியில் கடும் குளிர் நிலவியது. எனினும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடாமல் திறந்த வெளியில் படுத்து உறங்கினர்.

SCROLL FOR NEXT