உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் பாஜக நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
வளர்ச்சிக்கான அரசியலை முன்னெடுக்கும் பாஜகவுக்கும், சுயநல அரசியலை நடத்தும் காங்கிரஸுக்கும் இடையே தற்போது கொள்கை ரீதியிலான போர் நடைபெறுகிறது. இதில், பெரும்பாலான மாநில மக்களால் காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் நடைபெற்ற பிஹார் தேர்தலில்கூட, காங்கிரஸ் அங்கம் வகித்த கூட்டணியை மக்கள் தோற்கடித்தனர். அவர் கள் வளர்ச்சியையும், நாட்டு நலனையும் கொள்கையாகக் கொண்ட பாஜகவை தேர்ந்தெடுத் துள்ளனர். நாடு முழுவதும் மோடி தலைமையிலான பாஜக அலை வீசி வருவதற்கு பிஹார் தேர்தலே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
பிரதமர் மோடியை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு, நாட்டு நலனுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பேசி வருகிறார். அவரது கருத்துகளை சர்வதேச தளத்தில் ஓர் ஆயுதமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பயன்படுத்துகிறார். காங்கிரஸின் இந்த செயலால் அக்கட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
இவ்வாறு ஜே.பி. நட்டா பேசினார்.