சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள 3-வது விமானம் தாங்கி கப்பல் அவசியம் என்று கடற்படை தளபதி கரம்பீர் சிங் கூறினார்.
இதுதொடர்பாக கடற்படை தளபதி கரம்பீர் சிங் கூறும்போது, “ஆசியாவில் தற்போது நிலவும் பாதுகாப்பு சூழலில் 3-வது விமானம் தாங்கி கப்பல் அவசியம். இந்தியா தன்னே தானே பாதுகாத்துக் கொண்டால் மட்டும் போதாது. தனது வலிமையை வெளிப்படுத்தும் நாடாக இருக்க வேண்டும்” என்றார்.
கடற்படையில் தற்போது செயல்பாட்டில் உள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, விரைவில் இணையவுள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகிய விமானம் தாங்கி கப்பல்களில் போர் விமானங்களை இயக்குவதற்கு ‘ஸ்கீ ஜம்ப் ஸ்டோபார்’ என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் எலெக்ட்ரோ மேக்னெடிக் தொழில்நுட்பத்துடன் போர் விமானங்களை இயக்கும் வகையில் 65 ஆயிரம் எடை கொண்ட புதிய விமானம் தாங்கி கப்பல் அவசியம் என கடற்படை கருதுகிறது.
வங்காள விரிகுடா, அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்கு சொந்தமாக 1,062 தீவுகள் உள்ளன. புதிய விமானம் தாங்கி கப்பலுக்கு செலவிடும் அதே தொகையில், இந்த தீவுகளில் சிலவற்றில் புதிய விமானப் படை தளம் அமைத்து விமானப் படையின் பலத்தை அதிகரிக்கலாம் என்பது பாதுகாப்பு நிபுணர்கள் சிலரின் கருத்தாக உள்ளது.