இந்தியா

சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் காரில் சென்ற அமிதாப்பை 4 கி.மீ. பின்தொடர்ந்த புலி

செய்திப்பிரிவு

இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் எங்கு சென்றாலும் ரசிகர்கள் அவரைப் பின்தொடர்வது வழக்கம். அந்த வகையில் தன்னை பின்தொடர்பவர்கள் பட்டியலில் புதிதாக ஒரு புலியை இணைத் துள்ளார் அமிதாப்.

ஆம், மும்பையில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் (எஸ்ஜிஎன்பி) காரில் உலா வந்த அமிதாப்பை ஒரு புலி சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பின்தொடர்ந்து சென்றுள்ளது. இது தொடர்பான தகவல்கள், புகைப்படங்களை தனது பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் அவர், “மும்பை மாநகரின் இதயமாக விளங்கும் பகுதியில் அமைந்துள்ள இந்த எஸ்ஜிஎன்பி வனப்பகுதியில் நாங்கள் காரில் உலா வந்தோம். அப்போது ஒரு புலி அபூர்வமாக சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் எங்களை பின்தொடர்ந்து வந்தது என்பதை உங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. இயல்பாக புலிகள் இதுபோல பின்தொடர்வதில்லை. ஆனால் எஸ்ஜிஎன்பி வனப்பகுதியில் குறிப் பாக அடிக்கடி நாங்கள் சூட்டிங் எடுக்கும் திரைப்பட நகரம் அமைந் துள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்ததை நம்ப முடியவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

வனப் பகுதிக்குள் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மகாராஷ்டிராவின் ‘புலி தூதுவ ராக’ அமிதாப் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் கூறும்போது, “வனப்பகுதிகள் மற்றும் சரணால யங்களில் உள்ள புலிகளை பாதுகாக்க என்னால் முடிந்தவரை உதவி செய்வேன்” என்றார்.

எஸ்ஜிஎன்பி வனப்பகுதிக்குள் சுதந்திரமாக சுற்றித் திரியும் புலிகளுக்கு மத்தியில் சுற்றுலாப் பயணிகள் உலா வருவதற்காக, புலிகள் மற்றும் சிங்கங்களின் உருவப்படங்கள் வரையப்பட்ட 2 சிறப்பு பஸ்களை அமிதாப் தொடங்கி வைத்தார்.

          
SCROLL FOR NEXT