கரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆதார் பூனாவாலா சிறந்த ஆசியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டின் சிறந்த ஆசியர்களாக 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூரைச் சேர்ந்த முன்னணி நாளிதழ் ‘தி ஸ்ட்ரெய்ட் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
புனேவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டன் - ஸ்வீடன் பார்மா நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகாவுடன் கூட்டு சேர்ந்து கரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கோவிட்ஷீல்டு என்ற தடுப்பூசி சோதனை ரீதியில் 2 கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சீன ஆராய்ச்சியாளர் ஷாங் யோங்ஸென், மேஜர் ஜெனரல் சென் வெய், ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ரியுசி மோரிஷிடா, சிங்கப்பூரைச் சேர்ந்த பேராசிரியர் ஊய் எங் இயோங் ஆகியோர் சார்ஸ்-சிஓவி-2 வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி ஆராய்ச்சியில் முன்னணியில் ஈடுபட்டவர்களாவர். தென் கொரியாவைச் சேர்ந்த தொழிலதிபர் சியோ ஜூங்-ஜின் இந்த தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க செய்வதில் பெரும் பணியாற்றி வருகிறார். இவர்கள் 5 பேருடன் சேர்ந்து 6-வது நபராக ஆதார் பூனாவாலாவும் இடம்பெற்றுள்ளார்.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தை 1966-ம் ஆண்டு ஆதார் பூனாவாலாவின் தந்தை சைரஸ் பூனாவாலா தொடங்கினார். இந்நிறுவனத்தில் 2001-ம் ஆண்டு இணைந்த ஆதார் 2011-ம் ஆண்டு சிஇஓ-வானார்.