மும்பையில் நடத்தப்பட்ட கரோனா வைரஸ் சோதனையில் பாசிட்டிவ் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக ஆணையர் ஐ எஸ் சாஹல் சனிக்கிழமை தெரிவித்தார்.
இந்திய அளவில் 136 நாட்களுக்குப்பின் கோவிட் சிகிச்சை பெறுபவர்கள எண்ணிக்கை 4.10 லட்சத்துக்கும் கீழ் குறைந்து வந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல மகாராஷ்டிரா தலைநகர் மும்பையிலும் கோவிட் பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளன. மும்பையில் ஜனவரியில் 2-வது அலை வீசும் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது மும்பையில் கரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மும்பை மாநகராட்சி ஆணையர் ஐ எஸ் சாஹல் கூறியதாவது:
வைரஸ் பாதிப்புகள் தொடங்கியபோது, மும்பையில் நடத்தப்பட்ட பரிசோனைகளில் 35 முதல் 36 சதவீதம் வரை பாசிட்டிவ் இருந்தது.
சோதனையில் பாசிட்டிவ் விகிதம் நவம்பர் 25 அன்று 6.69 சதவீதமாக இருந்தது. நேற்று (டிசம்பர் 4 ஆம் தேதி) நகரத்தில் 16,394 பரிசோதனைகள் நடத்தப்பட்டன, அவற்றின் முடிவுகளில் 825 அல்லது 5.03 சதவீதம் பாசிட்டிவாக வெளிவந்தன. மார்ச் மாதத்திலிருந்து முதல் முறையாக ஐந்து சதவீதமாகக் குறைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட 16,394 சோதனைகளில், 8,867 ஆர்டிபிசிஆர் மற்றும் 7,527 ஆன்டிஜென் சாதனங்கள் மூலம் சோதனை செய்யபபட்டன. இதில் முறையே 684 ஆர்டிபிசிஆர் சோதனைகள் மற்றும் 141 ஆன்டிஜென் சோதனைகள் பாசிட்டிவாக வந்துள்ளன.
கடந்த பத்து நாட்களாக கோவிட் சோதனை பாசிட்டிவ் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கைக்குரியதாகத் தோன்றுகிறது, ஆனால் இதைப் பார்த்தவுடன் நமக்கு மனநிறைவு ஏற்பட்டுவிடக்கூடாது, பாதுகாப்புகளையும் குறைத்துக்கொள்ளக்கூடாது. எப்போதும் போல முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு மும்பை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.