உத்தரப் பிரதேசத்தின் தாத்ரியில் நடந்த படுகொலைச் சம்பவம் பாஜக-வினரால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டதாகவும், இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்துக்கு தான் கடிதம் எழுதியிருப்பதாகவும் அம்மாநில அமைச்சர் அசாம் கான் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மக்கள் மத்தியில் மதம் சார்ந்த பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தாத்ரி சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை குறித்தும், இதில் தலையிடக் கோரியும் ஐ.நா-வுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
இந்தச் சம்பவத்தை பாஜக திட்டமிட்டு நடத்தியுள்ளது. பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் முஸ்லிம் மக்களிடம் எதிர்பார்ப்பது தான் என்ன?
பிரதமர் நரேந்திர மோடி நம் நாட்டில் உள்ள சின்ன சின்னப் பிரச்சினைகளை எல்லாம் சர்வதேச அரங்கில் கொண்டு சென்று பேசுகிறார். ஆகவே நமது பிரச்சினைகளையும் இனி நாம் அங்குதான் முறையிட வேண்டும்" என்றார்.
உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரி தாலுக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகைக்காக பசு மாடு பலி கொடுத்து அதன் இறைச்சியை உண்டதாக கிளம்பிய வதந்தியில், 52 வயது இக்லாக் அடித்துக் கொல்லப்பட்டார். இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தக்க நீதி கிடைக்க உதவுவதாகவும் நிதி உதவியாக ரூ.45 லட்சம் வழங்குவதாகவும் முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தாத்ரி கொலைச் சம்பவத்துக்கு அம்மாநில தலைமையில் உள்ள சமாஜ்வாதி கட்சி தான் காரணம் என்று பாஜக குற்றம்சாட்டி வரும் நிலையில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அமைச்சர் அசாம் கான் 'தாத்ரி சம்பவத்துக்கு பாஜகவே காரணம்' எனக் கூறியுள்ளார்.