பிரதிநிதித்துவப் படம். 
இந்தியா

ஹெல்மெட் இல்லை எனில் பெட்ரோல் இல்லை: கொல்கத்தாவில் பழைய விதி மீண்டும் அமலுக்கு வருகிறது

பிடிஐ

‘ஹெல்மெட் அணியவில்லை எனில் பெட்ரோல் இல்லை எனும் போக்குவரத்து விதி கொல்கத்தாவில் டிசம்.8 முதல் மீண்டும் நடைமுறைப்படுத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இது டிசம்பர் 8-ம் தேதி தொடங்கி பிப்ரவரி முதல்வாரம் வரை 60 நாட்களுக்கு தொடரும்.

ஜூலை 2016-ல், இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாதது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி தனது அதிருப்தியைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, நகர காவல்துறை, இதேபோன்ற “ஹெல்மெட் இல்லை பெட்ரோல்” விதி நடைமுறைப்படுத்தியது.

இதன்மூலம் பெட்ரோல் பம்புகள் ஹெல்மெட் இல்லாமல் மோட்டார் சைக்கிள்களுக்கு எரிபொருள் விற்பனை செய்வதை காவல்துறை தடைசெய்தது.

கொல்கத்தாவில் இந்த போக்குவரத்து விதி மீண்டும் கடுமையாக அமல்படுத்தப்பட உள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல் ஆணையர் அனுஜ் சர்மா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:

"இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் இல்லாமல் சவாரி செய்வதும், ஹெல்மெட் இல்லாமல் பின்சீட்டில் ஆட்களை ஏற்றிச் செல்வதும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதுபோன்ற விதிமீறல் சம்பவங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

இதுபோன்ற வழக்குகளில் பல வழக்குகள் சட்ட அமலாக்க நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், ஹெல்மெட் இல்லாமல் இருச்சக்கர வாகனங்களில் சவாரி செய்வதால் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களுக்கான சாத்தியமும் விபத்துக்கள் குறித்த அச்சமும் எப்போதும் இருக்கும்.

சிறந்த சாலை ஒழுக்கத்தை உறுதி செய்வதற்கும், போக்குவரத்து சட்டங்களை மீறுபவர்களைத் தடுப்பதற்கும், சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் உள்ள விதிமுறைகளுக்கு முரணாக கொல்கத்தாவில் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்வது தடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கும், ஹெல்மெட் இல்லாமல் பில்லியனில் சவாரி ஏற்றிவருபவர்களுக்கும் ஹெல்மெட் இல்லையெனில் பெட்ரோல் இல்லை என்ற விதிமுறையின்படி எந்தவொரு இரு சக்கர சவாரிக்கும் பெட்ரோல் நிலையங்கள் பெட்ரோல் விற்காது.

இவ்வாறு காவல் ஆணையரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT