காஷ்மீரின் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. அதற்கு இந்தியா தகுந்த பதிலடி தந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் நேற்றிரவு முதல் நடைபெற்ற பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லை அருகே ஹிரானகர் செக்டரின் பன்சார் எல்லை புறக்காவல் பகுதியில் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
எல்லையைத் தாண்டிய துப்பாக்கிச் சூடு இரவு 9.50 மணியளவில் பாகிஸ்தான் தொடங்கியது. எல்லையை நோக்கியுள்ள இந்திய ராணுவ நிலைகள், கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தனது துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து நடத்தியது.
பாகிஸ்தானின் இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வலுவான மற்றும் தகுந்த பதிலடி கொடுத்தது. அதிகாலை 3.35 மணி வரை இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு தொடர்ந்தது. ஆனால், இந்திய தரப்பில் எந்த சேதமும் ஏற்படவில்லை.
குர்னம் மற்றும் கரோல் கிருஷ்ணா எல்லை புறக்காவல் பகுதிகளிலும் பாகிஸ்தான் துருப்புக்கள் சில நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
இவ்வாறு பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.