ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் பணம் சம்பாதிக்கலாம், மாற்று வேலைவாய்ப்பு கிடைக்கும் போன்ற தவறான நம்பிக்கைகளை விதைக்கும் விளம்பரங்களை அனுமதிக்காதீர்கள் என தனியார் சேனல்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக இந்திய விளம்பரக் கவுன்சில் கடந்த மாதம் 24-ம் தேதி வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகளை அனைத்து தனியார் சேனல்களும் கடைபிடிக்க வேண்டும். இந்த நெறிமுறைகள் வரும் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்திய விளம்பரக் கவுன்சில் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு தனியார் சேனல்கள் செயல்பட வேண்டும். சட்டத்தால் தடை செய்யப்பட்ட செயல்களை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரங்களை ஒளிபரக்கூடாது.
ஆன்லைன் விளையாட்டுகள், ஃபேன்டஸி விளையாட்டு உள்ளிட்டவை குறித்து ஏராளமான விளம்பரங்கள் தனியார் சேனல்களில் ஒளிரப்பப்படுகின்றன. இந்த விளம்பரங்களில் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவதன் மூலம் பணம் கிடைக்கும், சம்பாதிக்கலாம், மாற்று வேலைவாய்ப்புக்கு ஆன்லைன் விளையாட்டு விளையாடலாம் என்று மக்களுக்கு தவறான நம்பிக்கைகளை விதைக்கப்படுகின்றன.
இந்த விளம்பரங்கள் குறித்த தகவல்கள், புகார்கள் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு அதிக அளவில் வந்தன.இந்த விளம்பரங்கள் பார்வையாளர்களையும், மக்களையும் தவறான பாதையில் செல்லவே தூண்டுகின்றன, தவறான நம்பிக்கைகளைத்தான் விதைக்கின்றன.
ஆனால், இந்த விளையாட்டுகள் விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள், நிதிசார்ந்த இழப்புகள், மனரீதியான பாதிப்புகள் குறித்து வெளிப்டையாகத் தெரிவிக்கப்படுவதில்லை. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், கேபிள் டிவி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் விளம்பரங்கள் இல்லை.
இதையடுத்து, கடந்த மாதம் 11-ம்தேதி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் இந்திய விளம்பரக் கவுன்சில், செய்தி ஒளிபரப்பாளர்கள் கூட்டமைப்பு, இந்திய ஒளிபரப்பாளர்கள் கூட்டமைப்பு, அனைத்து இந்திய கேமிங் கூட்டமைப்பு, இந்தியன் ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் ஃபெடரேஷன், ஆன்லைன் ரம்மி ஃபெடரேஷன் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனைய மற்றும் விரிவான விவாதத்துக்குப்பின், விளம்பரதாரர்கள், ஒளிபரப்பாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டும், நுகர்வோர்களையும், பார்வையாளர்களையும் பாதுகாக்கும் நோக்கில், வெளிப்படையான விளம்பரங்களை வெளியிட வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க இந்திய விளம்பரக் கவுன்சில் ஒப்புக்கொண்டது. இதன்படி கடந்த மாதம் 24ம் தேதி வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி 18 வயதுக்குட்பட்டவர்கள் இந்த ஆன்-லைன் விளையாட்டுகள் மூலம் பணம் வெல்லுதல், விளையாடலாம் என்று பரிந்துரைக்க அனுமதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளேடுகள், தொலைக்காட்சி விளம்பரங்கள், ஆடியோ போன்றவற்றில் இந்த விழிப்புணர்வு வாசகங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளேடுகளில் விளம்பரங்களில் 20 சதவீதம் அளவு இடத்தில் இந்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெறுதல் அவசியம். இந்த வழிகாட்டி நெறிமுறைகள் வரும் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.
இவ்வாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.