கடந்த 2018-ம் ஆண்டில் உள்அரங்கு வடிவமைப்பாளருக்கு பணம் தராமல் தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ரிபப்ளிக் சேனல் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸாமி உள்பட 3 பேருக்கு எதிராக மும்பை போலீஸார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை நேற்றுத் தாக்கல் செய்தனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு உள்ளரங்கு வடிவமைப்பாளர் அன்வி நாயக் பணிகளுக்குப் பணம் தராமல் ரிபப்ளிக் சேனல் இழுத்தடித்ததால் அவரும், அவரின் தாயார் குமுத் ஆகியோர் தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தற்கொலைக்குத் தூண்டியதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். ஆனால், அந்தக் காலகட்டத்தில் பாஜக ஆட்சி மாநிலத்தில் நடந்ததால், அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
ஆனால், சமீபத்தில் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்த வழக்கின் விசாரணையில் உள்ளரங்கு வடிவமைப்பாளரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டில் ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் போலீஸார் கடந்த மாதம் 4-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த மாதம் 11-ம் தேதி ஜாமீன் பெற்று அர்னாப் கோஸாமி தற்போது வெளியில் உள்ளார்.
இந்நிலையில் உள்ளரங்கு வடிவமைப்பாளரை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸாமி , ஃபெரோஷ் ஷேக், நிதிஷ் ஷரதா ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை போலீஸார் ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 65 பேர் சாட்சியங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர் என அரசு தரப்பு வழக்கறிஞர் பிரதீப் காரத் தெரிவித்தார்.
இந்த வழக்கில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தடை விதிக்க வேண்டும் எனக் கோரி அர்னாப் கோஸாமி தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனு நேற்றுவரை விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.