விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க வந்த மூதாட்டி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததற்காக, நடிகை கங்கனா ரனாவத் மன்னிப்பு கேட்க வேண்டும் என சீக்கிய அமைப்பு ஒன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற பில்கிஸ் பனோ என்ற 86 வயது மூதாட்டியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இவர் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர் ஆவார்.
இதுகுறித்து நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் கூறும்போது, “ரூ.100 கொடுத்தால் மூதாட்டி பில்கிஸ் பனோ எந்தப் போராட்டத்திலும் பங்கேற்பார்” என பதிவிட்டிருந்தார். இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அந்த மூதாட்டிக்கு பதில் வேறு ஒருவரின் புகைப்படத்தை கங்கனா பதிவிட்டிருந்தார். அதுவும் சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், பில்கிஸ் பனோ குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததற்காக, கங்கனா ரனாவத் ஒரு வாரத்துக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை கமிட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.