ஆந்திர மாநிலத்தில் அரசுப் பேருந்து கட்டணம் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் எதிர்க் கட்சிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டன.
ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் சாம்பசிவராவ் தலைமையில் அத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் விஜயவாடாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் பேருந்து கட்டணத்தை 10 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து சாம்பசிவ ராவ் கூறும்போது, “எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், சூப்பர் லக்ஸுரி, இந்திரா, கருடா போன்ற சொகுசு பேருந்துகளுக்கு உடனடியாக 10 சதவீதம் கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இது வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். இதன்படி கி.மீ.க்கு 8 முதல் 9 பைசா வரை அதிகரிக்கும். மேலும் கிராமப்புற பேருந்துகளுக்கு 5 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள மானிய விலை பாஸ்களின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கினாலும், கடந்த 2 ஆண்டுகளில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. தற்போது உயர்த்தப்பட்ட கட்டணங்கள் மூலம், மாதத்துக்கு ரூ. 55 கோடி வீதம், ஆண்டுக்கு ரூ. 660 கோடி மக்கள் மீது சுமை ஏற்றப்பட்டுள்ளது. அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.
இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வுக்கு காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்பு தெரிவித்தனர். விஜயவாடா, விசாகப்பட்டினம், குண்டூர், கர்னூல், நெல்லூர், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இக்கட்சியினர் ஆர்பாட்டம் மற்றும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
டீசல் விலை குறைந்துள்ள நிலையில், பேருந்து கட்டணத்தை மாநில அரசு உயர்த்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் கட்டண உயர்வை மாநில அரசு உடனே திரும்பப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.